மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொள்ளவுள்ளதுடன் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்ரின் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,
இந்த ஆண்டுக்கான அபிவிருத்திக்காக 15கோடி ரூபா பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் முயற்சியினால் அதிகளவான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்ட நிதியின் ஊடாக அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதிகளை ஒதுக்கீடுசெய்துள்ளனர்.இதன் மூலம் 60 திட்டங்களுக்கு 36 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ஏழு பாடசாலைகளை புனரமைப்பு செய்வதற்காக 2.83 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 42 திட்டங்களுக்காக 46 இலட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் மகளிர் அமைப்புகளுக்கு 41 இலட்சம் ரூபா விசேடமாக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் களுதாவளை கல்வி அபிவிருத்தி நிலையத்துக்கு ஐந்து இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.அத்து;டன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் 18 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகள் 33திட்டங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று மகிழூர் கிழக்கில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு தலா ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் வழங்கப்படவுள்ளன.அத்தடன் வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் 10பேருக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தி திட்டங்களின் பணிகளை மிக விரையில் ஆரம்பிப்பதற்கான அனுமதியை அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.இதன் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டங்களை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பாக முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.