அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக உலகுவானுர்தி மூலம் பூமழைபொழிய நடைபெற்ற தேர்த்திருவிழா

அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாகவும் தமிழர்களின் வரலாற்றினை உலகறியச்செய்த ஆலயமாகவும் உள்ள வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா முதன்முறையாக உலகுவானுர்தி மூலம் பூமழைபொழிய இன்று சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்று 3ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் நாளை வெள்ளிக்கிழமை காலை தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.

இந்த வீரர்முனை ஆதிகால ஆட்சி வரலாற்றில் முக்கியமான ஒரு இடமாக காணப்பட்டது.

அதாவது கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அக்காலப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த “சூரதீசன்” என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான்; என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது.

கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் “வீரர்முனை” என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் வந்த கப்பல் கரை தட்டியது.

இதன்படி சீர்பாத தேவியினால் கொண்டுவரப்பட்ட விக்ரகம் பிரதிஸ்டை செய்யப்பட்டு காலம்காலமாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் காலம் காலமாக இப்பகுதியில் தமிழ் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களின் காணிகளை சூறையாடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும் அந்த முயற்சிகள் விநாயகப்பெருமானின் அருளினால் தடுக்கப்பட்டது.

இதன் உச்சமாக 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த கிராமத்துக்குள் புகுந்த ஊர்காவல் படையினர் பெண்;கள்,குழந்தைகள் என 155க்கும் மேற்பட்டவர்களை கொன்றுகுவித்ததுடன் வீரமுனை மக்களையும் துரத்தியடித்தனர்.அவர்களது காணிகளையும் அபகரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவர்கள் திருக்கோவில்,தம்பிலுவில் ஆகிய பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தபோதிலும் தங்களது கிராத்துக்கு செல்லவேண்டும் என்ற முனைப்புக்கொண்டிருந்ததன் காரணமாக அன்றைய பாராளுமன்ற உறுப்பினரும் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின்(ஜனா)முயற்சியினால் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இன்று சகல வளங்களுடனும் வீரமுனை  மக்கள் வாழ்வதற்கு வழியேற்படுத்திய சிந்தாயாத்திரைப்பிள்ளையாருக்கு கோலாகலமாக வீரமுனை மக்கள் விழா எடுத்துவருகின்றனர்.

இதன் கீழ் இன்று காலை ஆண்டியர் சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம்பெற்றது.இந்த பாற்குட பவனியில் பிரதியமைச்சர் வீரசேகரவும் கலந்துகொண்டார்.

பல்வேறு கலாசார நிகழ்வுகளுடன் யானை பவனி வர பாற்குட பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் மாலை தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக இந்த ஆலயத்தில் உலங்குவானூர்தி மூலம் தேர்த்திருவிழாவுக்கு பூமழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.