மட்டக்களப்பு,கிரான் பிரதேச செயலாளர் பிரிலுள்ள பொத்தானை அணைக்கட்டு மீள்குடியேற்ற கிராமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை காடு அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் காணிக்குரிய தகுந்த ஆவணங்களை சமர்பித்து பிரதேச செயலாளரின் அனுமதியினை பெற்று மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வனஇலகா திணைக்கள அதிகாரிகள,; பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ உயர் அதிகாரி மற்றும் கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகஸ்த்தர் ஆகியோர்கள் தடை விதித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இது தொடர்பான கூட்டமொன்று பொத்தானை கிராமத்திலுள்ள முகைதீன் ஜிம்மா பள்ளி வாயல் முற்றத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட வனவள பணிப்பாளர் ஏ.டி.பிரசாத்,உதவி மாவட்ட வனவள பணிப்பாளர் எம்.ஏ.நபீஸ்,பிரதேச செயலக காணி உத்தியோகஸ்தர்.ச.நிமலநாதன்,மற்றும் இராணுவ உயர் அதிகாரி மேஜர் சமரநாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்தனர்.
இப்பிரதேசங்களில் புதிதாக சட்டவிரோதமாக காணிகளை மீள் குடியேற்ற நடவடிக்கைக்கு பயன்படுத்த முயற்சிப்பது நிறுத்தவேண்டும்.வனத்தில் உள்ள மரங்கள் வெட்டுவதையோ மிருகங்களை வேட்டையாடுவதையோ நிறுத்தவேண்டும்.அவ்வாறு இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.மற்றும் காடுகளை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.என்று கோரிக்கைகள் பல வன வள திணைக்கள அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டன.
தற்போது 84 குடும்பங்களுக்கே மீளக்குடியேற அனுமதி வழங்க்ப்பட்டுள்ளதாகவும் ஏனையோர்கள் தங்களது ஆவணங்களை பிரதேச செயலகமூடாக பெற்று குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று இதன்போது மக்களுக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் வனவள திணைக்களத்தினால் மீள் மர நடுகைத் திட்டத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேசத்திற்குள் எவரும் சென்று குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
மேற்படி நடவடிக்கைக்கென ஒதுக்கப்பட்ட காணியினுள் பொதுமக்களின் குடியேற்ற காணிகளும் உள்ளது என்றும் இதற்கான ஆதாரங்களும் உள்ளது என்று பொதுமக்களினால் கருத்து முன்வைக்கப்பட்டது.அவ்வாறான காணி சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன் மீள்குடியேற்றத்திற்காக 4பயணாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்ட இந்தியன் வீட்டுத்திட்ட வீடுகளை ஒதுக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களது காணிகளில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. மேற்படி கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.