வவுணதீவில் இரவு வேளையில் காவல் இருந்து யானைகள் துரத்திய மாகாணசபை உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை மற்றும் பாவற்கொடிச்சேனை பகுதிகளில் யானைகளின் நடமாட்டமும் அட்டகாசமும் மீண்டும் தொடர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஐந்து தினங்களாக பத்தரைக்கட்டை பகுதியில் ஒரு தனியன் காட்டு யானை அட்டகாசம் செய்துவருகின்றது மக்களின் வீடுகள் வயல்நிலங்கள் பயிர்கள் என்பவற்றை சேதப்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் தெரியப்படுத்தியதற்கிணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், துரைரெட்ணம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அன்று இரவு பூராகவும் மக்களுடன் தங்கியிருந்தனர்.

அவ்வேளையில் அதே யானை மீண்டும் அப்பிரதேசத்தினுள் பிரவேசிப்பதை அறிந்த அவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்களின் உதவியோடு பொதுமக்களுடன் சேர்ந்து வெடிகளைக் கொண்டு அந்த யானைகளை விரட்;டியடித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது உண்மைதான். இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலக பிரதிப்பணிப்பாளர் பத்திரண அவர்களை இன்று 2014.06.30ம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரியப்படுத்தி இங்குள்ள மட்டக்களப்பு காரியாலத்துடன் சோத்து மேலும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மேலும் ஒரு உப பணிமனையை அமைக்க வேண்டும் எனவும் அதற்குரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாகன வசதி ஆளணிகள் போன்ற வசதிகள் மேற்கொண்டு தருமாறும் வேண்டுகோள் விடுத்ததுடன் அம்பாறை பொலநறுவை பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மட்டக்களப்பு காரியாலயத்தின் வசதிகள் குறைவாகவே இருக்கின்றன என தெரிவிக்கப்பட்ட போது வாகனங்களைப் பொருத்த மட்டில் அவற்றைப் பெற்றுக் கொடுக்க மூன்று, நான்கு மாதங்கள் தேவைப்படும் என உதவிப்பணிப்பாளர் தெரிவித்த போது மட்டக்களப்பில் இருக்கும் ஏனைய காரியாலயங்களில் இருக்கும் வாகனங்களை தேவைக்கேற்ப பிரச்சனைகட்குரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆவன செய்து தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு மேற்படி நிலவரம் பற்றி தெரிவித்த போது குறித்த யானைகள் அப்புறப்படுத்துவது தொடர்பில் கடிதப் போக்குவரத்துகள் மேற்கொள்வதற்கு நான்னுகு, ஐந்து நாட்கள் தேவைப்படும் என அலுவலகப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப காலத்தில்தாங்கள் கூறும் பதில் பொருத்தமற்றது மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டு இதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.