மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி ஜெயந்தினி கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் 2 தங்க பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் பெருமைசேர்த்துள்ளதுடன் தேசிய ரீதியான போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
செல்வி ஜெயந்தினியையும் ஏனைய விளையாட்டு வீரர்களையும் பாராட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் கணேசமூர்த்தி தலைமையில் அண்மையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
200மீற்றர் ஓட்டத்திலும் தடைதாண்டல் போட்டியிலும் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுள்ளதுடன் 400மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சாதனை படைத்த செல்வி ஜெயந்தினியும் கௌரவிக்கப்பட்டார்.
இங்கு உரையாற்றிய பேராசிரியர் சி.மௌனகுரு,
சாதனையாளர்களை பெற்ற மாணவர்களை கண்டு பேசி வந்தது மனத்துக்கு மகிழ்ச்சி தந்தது. சத்துணவு அதிகம் கிடைக்காத எல்லைப்புற தமிழ் கிராமத்தில் வாழும் இச்சிறார்கள் சத்துணவு சாப்பாட்டு உடல் உறுதி பெற்றவர்களை வெற்றி கொள்ளும் வல்லமை அவர்கள் உடலை விட உள்ளத்திலேயே இருந்தது.
உள உறுதி பெற்ற இச்சிறார்களுக்கான சகல வசதிகளையும் ஊக்கங்களையும் கல்வித் திணைக்களமும் ஆர்வமுடையோரும் அளிக்கவேண்டும். கிராமங்களை நோக்கிஇன்னமும் நமது கல்வி விரிவடையவில்லை. நகரங்களை பெரும்பாலும் மையமாகக் கொண்டுள்ளது.
கிராமப் புறங்களில்ஆயிரக்கணக்கான சுசந்திகாக்கள் இருக்கிறார்கள் .அவர்களின் திறமைகள் இனம் காணப்படவேண்டும்.வசதிபெற்ற மாணவர்கள் பெறும் சர்வ தேச விளயாட்டுப் பயிற்சிகள் இவர்களுக்கும்கிடைக்க வேண்டும்,அர்ப்பணிப்பு மிக்க அதிபருக்கும் ஆசிரியர் குழுவுக்கும் எனது பாராட்டுக்கள்.