மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு இராம கிருஸ்ணா விளையாட்டுக்கழகம் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக நடாத்திய படுவான்கரை பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டு சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
வருடாந்தம் முனைக்காடு இராம கிருஸ்ணா விளையாட்டுக்கழகம் இந்த சுற்றுப்போட்டியை நடத்திவருவதுடன் இந்த போட்டியில் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள அனைத்து கழகங்களும் பங்குபற்றிவருகின்றது.
இந்த ஆண்டுக்கான போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன் இந்த இறுதிப்போட்டியில் படுவான்கரையின் பலம் வாய்ந்த அணிகளான பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக்கழக அணியும் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழக அணியும் மோதிக்கொண்டன.
இதன்போது பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகம் 1.0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.இந்த சுற்றுப்போட்டியில் நடுவர்களாக மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இறுதிப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிப்பணிப்பாளர் சிறிநேசன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வெற்றிபெற்ற அணி மற்றும் சிறந்த வீரர்,தொடரின் சிறந்த வீரர் ஆகியவற்றுக்கான வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்த சுற்றுப்போட்டியில் முதல் இடத்தினை பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தினை பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தினை குருந்தையடிமுன்மாரி டெனிஸ்டார் விளையாட்டுக்கழகமும் நான்காம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்பரா விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது.