படுவான்கரையின் குடிநீர்ப்பிரச்சினை முற்றாக தீர்த்துவைக்க நிதியொதுக்கீடு -மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

படுவான்கரை பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையினை தீர்க்கும் வகையில் இந்த ஆண்டு 1800 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்புக்காக உள்வாங்கப்பட்டவர்களை அறிவுறுத்தும் கூட்டம் வெல்லாவெளி மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளரான பொன்.ரவீந்திரன்,ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,சமூகத்தி திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளா குணரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட 26 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட 1300 பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்காக வழங்கப்படவுள்ள சிறுகைத்தொழில் உதவிகள், வீட்டுத்தோட்டத்துக்கான உதவிகள் மற்றும் வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவிகள் தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா முதல் கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். 

இதேபோன்று படுவான்கரை பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினையை இந்த ஆண்டு முழுமையான தீர்த்துவைக்கும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 1800 மில்லி;யன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இதன் கீழ் அம்பாறையில் இருந்து குடிநீரை வெல்லாவெளி ஊடாக திக்கோடை மற்றும் ஏனைய பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோன்று வவுணதீவில் இருந்து பாவற்கொடிச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்கு நீர் வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வறட்சி காலங்களில் படுவான்கரை பிரதேச மக்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த துன்பங்கள் இந்த ஆண்டுடன் நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.