வாழ்நாள் முழுவதையும் நாடகக் கலைக்கு அர்ப்பணித்தவர்களுக்கான “நாடகக்கீர்த்தி” விருது பேராசிரியர் சி. மௌனகுருவுக்கு - பெருமை கொள்கிறது மட்டக்களப்பு

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகத்தின் அரச நாடகக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2014 அரச நாடக விழாவில் தமது வாழ்நாள் முழுவதையும் நாடகக் கலைக்கு அர்ப்பணித்த வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் “நாடகக்கீர்த்தி” விருதுக்கு தமிழ் மொழிமூலம் பிரபல நாடக வித்துவானும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை பீட பீடாதிபதியுமான பேராசிரியர் சி. மௌனகுருவுக்கு வழங்கப்படவுள்ளது. 

விருது வழங்கல் நிகழ்வு 2014 மார்ச் நாளை வெள்ளிக்கிழமை( 21 ஆம்  திகதி) மாலை 6.00 மணிக்கு கொழும்பு-07 பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

2014 அரச நாடக விழா கடந்த மாதம் மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது நெடும் நாடகங்கள் 13ம், சிங்கள குறு நாடகங்கள் 12ம், தமிழ் குறு நாடகங்கள் 03ம் மேடையேற்றப்பட்டது.

இவற்றிலிருந்து சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த ஒளியமைப்பு சிறந்த இசையமைப்பு, சிறந்த மேடையமைப்பு, சிறந்த மேடை முகாமைத்துவம், சிறந்த நாடகப் பிரதி, சிறந்த நாடகம் இவ்வாறு பத்தொன்பது விருதுகள் மற்றும் சான்றிதழ்கள், பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இம்முறை தமது வாழ்நாள் முழுவதையும் நாடகக் கலைக்கு அர்ப்பணித்த வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் “நாடகக்கீர்த்தி” விருதுக்கு சிங்கள மொழிமூலம் பிரபல நாடகக் கலைஞர் மேர்சி எதிரிசிங்க மற்றும் தமிழ் மொழிமூலம் பிரபல நாடகக் வித்துவான் பேராசிரியர் சி. மௌனகுரு ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

பேராசிரியருக்கு மட்டு.நியுஸ் செய்தித்தளம் மற்றும் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.