மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் இரு கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பின் இருவேறு பகுதிகளில் கைக்குண்டுகள் இரண்டு மீட்க்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை செயலிழக்கச்செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குறுமண்வெளியில் புதன்கிழமை(19) மாலை கைக்குண்டொன்றை மீட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறுமண்வெளி காளி கோயில் வளவை மண்போட்டு நிரப்புவதற்காக பழுகாமத்திலிருந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிவரப்பட்ட மண் குவியலுக்குள் இந்தக் கைக்குண்டு காணப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

ஏற்றிவரப்பட்ட மண்ணை கோயில் வளவில் கொட்டிப் பரப்பிக் கொண்டிருந்த கைக்குண்டு இருப்பதை கண்ட ஆலய நிர்வாகத்தினர் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர். இக்கைக்குண்டு குண்டுசெயலிழக்கச்செய்யும் படையினரால் செயலிழக்கச்செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் கடற்கரையோரத்தில் புதன்கிழமை  மாலை கைக்குண்டொன்றை தாம் கண்டெடுத்து செயலிழக்கச் செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் கடற்கரையோரத்தில் பாழடைந்த வளவொன்றினுள் இந்தக் கைக்குண்டு காணப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

அப்பகுதியில் நடமாடிய மீனவர்களின் கண்ணில் ,இக்கைக்குண்டு தென்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள கடற்படையினரின் காவற்சாவடிக்கு அறிவித்ததை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடியிலுள்ள குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து கைக்குண்டை மீட்டெடுத்து நேற்று மாலை அதனை செயலிழக்கச் செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.