மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான இடத்தினைப்பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மிக நீண்டகாலகமாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை தனியாக அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அவை வெற்றியளிக்காத நிலையே இருந்துவந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் பாடசாலையின் பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் பாடசாலையினை அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று தாழங்குடாவில் உள்ள பிரதிமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம்,பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
2011ஆம் ஆண்டு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பது தொடர்பில் பாடசாலை சமூகம் பிரதியமைச்சரிடம் கோரியதினை தொடர்ந்து இது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுடனும் பிரதியமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.
இதன் கீழ் கல்வியமைச்சரின் பாடசாலை வேலைகளுக்கான பணிப்பாளர் மாலினி பொன்சேகா தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு வருகைதந்து பாடசாலை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டுசென்றனர்.
வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு கட்டிடத்தினை அமைப்பதற்காக முதல் கட்டமாக 19 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதன் கீழ் பாடசாலைக்கான ஆரம்பபிரிவை அமைப்பதற்கு உள்ள காணி பாடசாலைக்கு தூர நிலையில் உள்ளதால் பெரும் சிரமங்கள் ஏற்படும் என்று பாடசாலை சமூகம் சுட்டிக்காட்டியதையடுத்து வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கு அருகில் ஆரம்ப பிரிவினையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
பாடசாலைக்கு அருகில் மாகாண பிரதி தபால்மா அதிபரின் காரியாலயம் உள்ளது.இதனை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு கொண்டுசென்று மாகாண பிரதி தபால்மா அதிபர் காரியாலயம் இருக்கும் இடத்தில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதனடிப்படையில் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்று இது தொடர்பில் கலந்துரையாடியதன் காரணமாக உயர் மட்ட குழுவினர் வருகைதந்து பார்வையிட்டுச்சென்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் இறுதிக்கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து சந்திக்க நடவடிக்கையெடுத்துள்ளேன். இந்த ஆண்டுக்குள் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இந்த சந்திப்பின்போது பாடசாலையின் கல்வி நிலைமை மற்றும் எதிர்கால கல்விச்செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.