மிருக பாதுகாப்பு சட்டத்தை மீறி கொண்டுசெல்லப்பட்ட எருமை மாடுகள் களுவாஞ்சிகுடியில் மீட்பு

திருகோணமலையில் இருந்து கல்முனைக்கு மிருக பாதுகாப்பு சட்டத்தினை மீறி அடைத்துக்கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை எருமை மாடுகள் கொண்ட லொறியை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து பிரதான வீதியூடாக கல்முனைக்கு கொண்டுசெல்கையில் களுவாஞ்சிகுடியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவற்றினை கைப்பற்றியுள்ளனர்.

மாடுகளை கொண்டுசெல்வதற்கான சட்டங்களை மீறி லொறியில் அதிகளவான எருமை மாடுகளை அடைத்துக்கொண்டுசென்றதன் காரணமாக சில மாடுகள் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவற்றினை கைப்பற்றியதாகவும் இதனைக்கொண்டுசென்ற சாரதி மற்றும் நடத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் வெலிசறை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது 14 மாடுகள் ஒரு லொறியில் அடைத்துக்கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் இது மிருகங்களை பாதுகாப்பாக கொண்டுசெல்லும் சட்டத்தினை மீறியுள்ளதன் காரணமாக மிருக வதை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட எருமை மாடுகளும் லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.