முயற்சி தவறலாம் ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது - மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்


( வி.சுகிர்தகுமார் )

நமது முயற்சி தவறலாம் ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது.நமது இலக்குக்களை அடைந்து கொள்ளும் பொருட்டு முன்னெடுக்கின்ற முயற்சிகள் சில வேளைகளில் தவறானதாக அமைந்து தோல்விகளில் முடியலாம். அதற்காக நாம் துவண்டுபோய் மீளவும் முயற்சிக்காமல் இருந்து விடக்கூடாது.அக்கரைப்பற்று கிரேட் கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் அன்மையில் கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளரும் நிந்தவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளருமான ஆர்.திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விஷேட அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் ரி.கஜேந்திரன், மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம், அட்டாளைச்சேனை உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.குணாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இங்கு கல்வித்துறையில் பல மட்டங்களிலும் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நீண்ட காலம் கணிதத்துறையில் கல்வி புகட்டிய ஆசானும் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளருமான கே.பாலதாசன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மேலதிக அரச அதிபர், ஒரு மனிதனின் விடாமுயற்சி அவனை சாதனையாளனாக்கும். இவ்விடயத்தை அனைவரும் தாரக மந்திரமாக கொள்ளவேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் பல வகையான சக்திகளை கொடுத்துள்ளான்.

அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். உயிர் உள்ளவைகளுக்கு வழங்கப்பட்ட சக்திபோல், உயிரற்றவைகளுக்கும் சக்தியை கொடுத்துள்ளான்.

மண்ணில் மணல்,களிமண், போன்ற பல வகையானவற்றிற்கும் பலவகையான பொருட்களை உருவாக்ககூடிய சக்தி உள்ளது போல் அழகாக ஆடும் மயில், இனிமையாக கூவும் குயில், அந்தரத்தில் அழகிய கூடு கட்டும் தூக்கணாங்குருவி போன்றவற்றிற்கும் வௌவேறு சக்தியினை இறைவன் வழங்கியுள்ளான்.

ஐந்தறிவு கொண்டவற்றால் இவ்வாறு செய்ய முடியுமானால் ஆறு அறிவு படைத்த எம்மால் ஏன்முடியாது. இதனை நாம் சிந்திக்க வேண்டும்.
பிள்ளைகளை வெளி உலகம் தெரியாமல் வெறும் புத்தகபூச்சாக உருவாக்கக் கூடாது. அவர்களது சுதந்திரமான கல்விக்கு நாம் உறுதுணையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஒவ்வொரு மாணவனும் முயற்சியாளனாக மாறும் போது சாதனையாளனாக மாற்றப்படுவான் எனவும் கூறிமுடித்தார்.