மருத்துவக் கலாநிதி மகேஸ்வரன் உமாகாந் எழுதிய ஈழத்தின் வலி வெளியிடப்பட்டது

கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட விரிவுரையாளர் மருத்துவக் கலாநிதி மகேஸ்வரன் உமாகாந் எழுதிய “ஈழத்தின் வலி”- மாவிலாறிலிருந்து நந்திக்கடல் வரை நான்காம் ஈழப்போர் - என்ற இலங்கையின் யுத்த வரலாற்று நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு "ஈஸ்ற் லகூன்" சுற்றுலா விடுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர்கலந்துகொண்டனர்.

ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபரான தேசகீர்த்தி ஜீ.துரைரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இவ் வெளியீட்டு விழாவில், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி கே.முருகானந்தன், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி வைத்தியக்கலாநிதி ரி.சுந்தரேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநலப்பரிவு வைத்தியக் கலாநிதி ரி.கடம்பநாதன், கௌரவ அதிதிகளாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ரி.சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி எஸ்.சுதர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாவிலாறிலிருந்து நந்திக்கடல் வரையிலான 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் பொதுமக்கள் போராளிகள் இராணுவ வீரர்கள் வைத்தியர்கள் அனுபவித்த ரண வலிகளின் சாட்சியமாக இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் நடைபெறவேண்டிய நல்லிணக்கம் பற்றியும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற நந்தக்கடல் யுத்தத்தில்,  யார் துரோகிகள், நூலாசியரின் சிறை அனுபவம் புலிகளின் வரலாற்றுத் தவறுகள், அவர்கள் ஏன் தோற்றார்கள், கரும்புலிகளின் பங்கு, மக்களின் அவலம், மாவிலாறு, அணைக்கட்டு விவகாரம்,  கருணாவின் பிரிவு ககோதர யுத்தம் , பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் என இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இது வரை வெளிவராத பல உண்மைச் சம்பவங்களின சாட்சியாக இவ்நூல் அமையப்பெற்றுள்ளது.

நிகழ்வில், பிரதம அதிதி  மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை, விசேட அதிதிகள், கௌரவ அதிதிகள் என அனைவரும் தங்களது அனுபவங்களையும் பல்வேறு விடயங்களையும் வெளிப்படுத்தினர். அதே நேரம் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை பீடாதிபதி ஜெய்சங்கர் நூல்ஆய்வுரையை நிகழ்த்தினார்.

மாவட்டத்திலுள்ள வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், வர்த்தகத்துறையினர் உள்ளிடோர் கலந்து கொண்ட இவ் நூல் வெளியீட்டின் இறுதியில் நூலாசிரியர் மருத்துவக் கலாநிதி மகேஸ்வரன் உமாகாந் ஏற்புரையை நிகழ்த்தினார்.