மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் மீனவர்களுக்கான உயிர் காப்பு அங்கிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட கடல்தொழில் நீரியலவளத்திணைக்களத்தினால் வழங்கப்பட்டன.
உயிர்காப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் உதவிப்பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ச் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிரேஸ்ட கடல்தொழில் பரிசோதகர் ஜே.ஏ.இ.எக்ஸ்.ராஜ்குமார், கடல்தொழில் பரிசோதகர்களான பி.மனோகரன், ரி;.அமிர்தலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அத்துடன், இன்றைய நிகழ்வில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமைக்கான காப்புறுதிப்பணமும் மீனவர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள 350 பேருக்கு உயிர் காப்பு அங்கிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படுகின்றன. இதன் முதல் கட்ட நிகழ்வே இன்றைய தினம் நடைபெற்றது.
வாவி மற்றும் கடல் மீன்பிடிகளில் ஈடுபடும் மீன்பிடியாளர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 23672 மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்த 25159 பேர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இந்த மீன்பிடியாளர்களால் 86372 பேர் நேரடிப்பயனாளர்களாக உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும் அடங்கலாக 1693 இயந்திரப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
அதே நேரம், கடல் தொழிலாளர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளும், காப்புறுதியும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 1693 இயந்திரப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும், என உள்ளன.
இவற்றில் இருவர் மீன்பிடிகளுக்காக செல்கின்றனர். இவர்களுக்காக உயிர்காப்பு அங்கிகள் கட்டாயமாகும். அதே நேரம் படகுக்கும் பயணிப்பவர்களுக்கும் காப்புறுதியும் கட்டாயமாகும்.
எந்தவிதமான காப்புறுதியும் இல்லாது மீன்பிடியில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நஸ்ரஈடு வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், நஸ்டஈடு வழங்க முடியாத நிலையும் காணப்படுகிறது. கடந்த காலங்களில் 13 பேர்வரை மீன்பிடியில் ஈடுபட்டவேளை உயிரிழந்துள்ளனர்.
மீனவர்களுக்கான காப்புறுதிகள் மேற்கொள்ளப்படும் போது, 115000 ரூபாய் இழப்பீடு மரணச்சடங்குச் செலவுடன் வழங்கப்படுகிறது. அதே நேரம் மீன்பிடிக்குச் சென்று காணாமல் போகும் மீனவர்களுக்கு அவர்கள் வீடு திரும்பும் வரையில் மாதாந்தம் 5000 ருபாய்களும் வழங்கப்படுகின்றன.
எனவே அனைத்து கடல் மீன்பிடியாளர்களும் தங்களது படகுகளுக்கும், மீன்பிடியாளர்களுக்கும் காப்புறுதிகளைச் செய்து கொள்ள வேண்டும். என்பதுடன் உயிர்காப்பு அங்கிகளையும் பயன்படுத்த வேண்டும்.
எனவே மீனவர்கள் தமது காப்புறுதியை கட்டாயமாக மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் உதவிப்பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ச் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.