தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் சுயநிர்யண உரிமைகளைப் பெறுவதற்குமான முயற்சிகளைப் பலப்படுத்தும் வகையிலும் காலத்தின் தேவை கருதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியை விரைவில் உருவாக்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா ) தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி மட்டக்களப்பில் உருவாக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்துவினவியபோதே ஜனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பல உறுப்பினர்களும், இயக்கத்தில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளேன்.
இருப்பினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியே இன்றைய காலத்தில் தேவை என்ற அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியை விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கவிருக்கிறேன்.
இதில் இணைந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளைப் பெறஅரசியல் ரீதியாகப் போராடவிரும்பும் இளைஞர் யுவதிகள் தொடர்பு கொள்ளமுடியும். அத்துடன், பலமான ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியை உருவாக்க ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
தனிப்பட்ட கட்சி ரீதியான அரசியல் செய்யாது, தமிழ் மக்களுக்கு தற்கால ஓட்டத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியல் ரீதியாக குரல் கொடுக்க வேண்டியது சாலப்பொருத்தமாகும்.
82ஆம் ஆண்டிலிருந்து ரெலோவின் உறுப்பினராகவும், முக்கிய பதவிகளிலும் வகித்துவரும் எனக்கு, எனது கட்சியினை வளர்க்க வேண்டிய விருப்பம், தேவையும் இருக்கிறது. இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறவேண்டியதன் தேவை கருதி நாங்கள் ஒன்றாக இந்த எதேச்சதிகார அரசுக்கெதிராக எமது சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கு ஒற்றுமையாக, கூட்டமைப்பாக போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.