பட்டிருப்பு வலய சாதனையாளர் பாராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் புலமை நூல் வெளியீடும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
களுதாவளை மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மாகாண மேலதிக பணிப்பாளர் மனோகரன்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் சுகுணன்,களுவாஞ்சிகுடி பிராந்திய பிரதி பொலிஸ் அத்தியட்சர் ரத்நாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன்போது அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பமாகின.
இதன்போது தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் பரீட்சைகளில் சாதனைகள் படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மற்றும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டுவரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் இதுவரையில் கல்விக்காக அளப்பரிய சேவையாற்றி ஓய்வுபெற்றுச்செல்பவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மூவினங்களின் கலாசார விழுமியங்களைக்கொண்டதாக கலை நிகழ்வுகள் நடைபெற்றது சிறப்பம்சமாகும்.

எனினும் தமிழ் மாணவர்களை நூறு வீதமாகக்கொண்ட பட்டிருப்பு வலய நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் விசனம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.