பாடசாலைகளில் சிறந்த மனிதர்களை உருவாக்கவேண்டும்.அவர்கள் இயந்திரங்களாக இல்லாமல் மனிதர்களாக செயற்படுபவர்களாக இருக்கவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான விஜய விக்ரம தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலய சாதனையாளர் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கை ஒரு அழகிய நாடாகும். இது இந்து சமுத்திரத்தின் முத்து,செரன்டிப்,என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இது வாழ்வதற்கு உலகில் சிறந்த நாடாகும். இது சிறந்த மண்வளம் ,ஆறுகள்,நீர்நிலைகள், கனியவளம்,அழகிய கடற்கரையோரங்கள் என்பவற்றை கொண்டுள்ளது. இங்கு மூன்று சமூகத்தை சேர்ந்த மக்கள் இணைந்து வாழ்கின்றனர். 2006ஆம் ஆண்டு நான் கிழக்குமாகாணத்திற்கு வந்தபோது கொலைகளும் கடத்தல்களும் குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நாளாந்தம் இடம்பெற்றுவந்தது. மகிந்தராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின் இவற்றை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்தினார்.
இரண்டு வருட காலமாக நாம் நல்லதொரு சமாதானசூழலை அனுபவித்து வருகின்றோம். அதுமட்டுமல்லாது முன்னெப்போதும் காணாதளவு பல துறைகளிலும் அபிவிருத்தியையும் கண்டுவருகின்றோம்.
உலகின் மற்றைய நாடுகளைவிட சிறந்த பொருளாதார அபிவிருத்தியையும் கண்டுவருகின்றோம். மத்தியவங்கி,உலகவங்கி அறிக்கைகளின்படி கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எட்டுவீதத்தினால் அதிகரித்துள்ளது. வறுமை,வேலையில்லாப் பிரச்சனை போன்றவை குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் பட்டிருப்பு கல்விவலய சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் இந்நிகழ்வு நடந்துகொண்டிருக்கின்றது.
எந்தவொரு துறையிலும் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு உயர்மட்டத்தை அடைபவர்களையே சாதனையாளர்கள் என்கின்றோம். சாதனையாளர்கள் அதிபுத்திசாலிகளாகவோ அல்லது கூடுதல் திறமைகொண்டவர்களாகவோ இருக்கவேண்டிய தேவையில்லை. அவர்கள் தங்கள் கடினஉழைப்பாலும் அர்ப்பணிப்பாலுமே சாதனைகளை படைக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள பிள்ளைகள் அனைவரும் சாதனைகளை படைக்கவேண்டும். எமது நாடு முன்னேற்றம் காண்பதற்கு இம்மாதிரியான பிள்ளைகளே தேவை.
கடந்த இரண்டு வருடங்களில் கிழக்குமாகாணசபை கல்விஅபிவிருத்திக்காக பல வேலைகளை செய்துள்ளது. 2006ஆம் ஆண்டு நான் கிழக்கு மாகாணத்திற்கு வந்தபோது தமிழ் ,சிங்கள மொழிமூலம் 4000ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது. இன்று தேவைக்கு அதிகமானளவு ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
ஆனால் கணிதம்,விஞ்ஞானம்,தகவல்தொழினுட்பம்,ஆங்கிலம் போன்ற பிரிவுகளில் இன்றும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
மாகாணகல்வித் திணைக்களம் தனது கடமையை முடிந்தளவு திறம்படச்செய்துவருகின்றது. கணித,விஞ்ஞான பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் நாளைகூட ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் பிரச்சினை என்னவெனில் கிழக்கு மாகாணத்தில் அப்படியாருமில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தமது கடமையை மீறாது செயற்படுவது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும். நீங்கள் சிறந்த மனிதர்களை உருவாக்கவேண்டும். அவர்கள் இயந்திரங்களாக இல்லாமல் மனிதர்களாக இருக்கவேண்டும். அவர்கள் குடும்பம்,கலாசாரம்,சமயம் போன்றவற்றின் பெருமையை உணர்ந்திருப்பதுடன் பெரியவர்களை மதிப்பவர்களாகவும் நாட்டை நேசிப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.