ஒரு வாரத்துக்கு முன்னர் அடக்கம் செய்த சடலம் தோண்டியெடுப்பு

காத்தான்குடியில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் சடலமொன்று இன்று(19.12.2013) காலை தோண்டி எடுக்கப்பட்டது.


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த பக்கீர் முகைதீன் மஜீட்(65)என்பவரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டது.

மேற்படி நபர் கடந்த 12.12.2013 வியாழக்கிழமை தனது வீட்டில் வைத்து மரணமடைந்தார். இவரின் சடலம் அன்றைய தினமே புதிய காத்தான்குடி பதுறியா ஜும் ஆ பள்ளியால் மைய்யவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தாக மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி ரஹீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர்; மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா சடலத்தை தோண்டுமாறு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் இன்று காலை குறித்த நபரின் சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் தோண்டபட்டது.

சடலத்தை பிரேத பரிசோதணை செய்யுமாறு நீதிபதி அப்துல்லா பொலிசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சலடம் பிரேத பரிசோதணைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டது.

இது தொடர்பனான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருடன் இணைந்து காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.