(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
கஞ்சா வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து காத்தான்குடி வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி) செவ்வாய்க்கிழமை (26.11.2013)விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று (26.11.2013)செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்படி வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் மேற்படி வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ்வை வழக்கலிருந்து விடுதலை செய்ததுடன் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பினால் மாத்திரமே நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் நீதிபதி அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளர்.
கடந்த 31.10.2013 வியாழக்கிழமை காலை மேற்படி பத்திரிகை பிரதம ஆசிரியரின் வீட்டில் கஞ்சா இருப்பதாக தெரிவித்து பொலிஸ் மோப்ப நாய் மூலம் தேடுதல் நடாத்திய காத்தான்குடி பொலிசார் கஞ்சா கட்டு ஒன்றை அவரது வீட்டு வளாகத்தில் வைத்து கைப்பற்றினர். இதையடுத்து பிரதம ஆசிரியரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மேற்படி வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா (புவி) இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் அன்றைய தினமே விடுதலை செய்யப்பட்டார்.
களுவாஞ்சிகுடி சுற்றலா நீதிமன்றத்தில் பதில் நீதிபதி பிரேம்நாத் முன்னிலையில் அன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இங்கிருந்து 198 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்திருந்தனர்.
தன் மீது காத்தான்குடி பொலிசாரினால் சுமத்தப்பட்ட கஞ்சா குற்றச்சாட்டை முற்றாக மறுத்த மேற்படி பத்திரிகை பிரதம ஆசிரியர் தனது வீட்டில் கஞ்சா இருக்க வில்லையெனவும் தன்னை கைது செய்வதற்காக தன் மீது திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்ட செயல் எனவும் நீதிமன்றத்தில் இவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
