மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்படுவது அவசியமாகும் என மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள காலி மாநகர சபை உறுப்பினர்கள் குழு நேற்று(25.11.2013)மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பை சந்தித்த போது அங்கு நடை பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மாமங்கராசா கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் பாரிய இடைவெளி ஏற்பட்டது.
இன்று யுத்த சூழ் நிலையின் பின்னர் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் புரிந்துனர்வும், ஒற்றுமையும் ஏற்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு நகரத்தை பார்த்தால் பிரசித்த பெற்ற இந்து ஆலயம், அதற்கு பக்கத்தில் பௌத்த விகாரை, அதிலிருந்து சிறிய தூரத்தில் கிறிஸ்த்தவ தேவாலயம், பள்ளிவாயல் என இவ்வாறு சகல மத வழிபாட்டுத்தளங்களும் உள்ளன.
காலி மாநகர சபையும், மட்டக்களப்பு மாநகர சபையும் இந்த நாட்டில் பழமையானதாகும். அந்த வகையில் இன ஐக்கியத்தையும் இன நல்லுனறவையும் சகோரத்துவத்தையும் ஏற்படுத்தும் வகையில் காலி மாநகர சபை பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியை தருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதில் காலி மாநகர சபை ஆணையாளர் ரணில் விக்ரமசேகர மற்றும் காலி மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் முக்கியஸ்த்தர்கள், அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.