எமது நிலங்களை தரமறுக்கும் அரசாங்கம் எமது நிலத்தில் பெரும்பான்மையினத்தை குடியேற்றுகின்றது –பொன்.செல்வராசா எம்.பி.

தமிழ் இனம் இடைத்தங்கல் முகாங்களிலும் தகரக் கொட்டகைகளிலும் தங்களது சொந்த இடத்தையும் இழந்து இதுவரை மீள்குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா கூறினார்.
மட்டக்களப்பு பெரிய கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு கழக தினத்தையொட்டி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது அதன் தலைவர் அ.அகிலன் தலமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வாராஜரா பிரதம அதிதியாகவும் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நடராஜா, துரைரெட்ணம், பிரசன்னா, வைத்திய அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராமப் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த மாவட்டத்தின் வறுமை நிலை கல்வியில் தாக்கம் செலுத்துவதாக கூறப்படுகின்றது.

யுத்தம் நடைபெற்று முடிந்து 7 ஆண்டுகள் கழிந்த பின்னரும் சம்பூர் மக்கள் தங்களது சொந்த நிலத்தை இழந்தவர்களாக இதுவரைக்கும் மீள்குடியேற்றப்படாமல் கிளிவெட்டியில் உள்ள தகரக்கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கான உணவைக்கூட வழங்க இந்த அரசாங்கம் மறுத்து வருகிறது.

சர்வதேச சட்டப்படி இவர்களுக்கு உண்ண உணவு கொடுக்கப்பட வேண்டும். இதனையும் கொடுக்காமல் அவர்களையும் தங்களது சொந்த இடத்தில் குடியமர்த்த விடாமல் தடுத்து வைத்திருப்பது எந்த வகையில் பொருத்தமுடையதாகும்.

இவர்கள் யுத்தம் நடைபெற்ற வேளையில் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் இரண்டு வருடம் அகதி வாழ்க்கை வாழ்ந்து பின்னர் அவர்களை சொந்த இடத்தில் குடியமர்த்தவென்று அழைத்துச்சென்று பின்னர் அவர்களை கிளிவெட்டியில் அனாதரவாக விடப்பட்ட நிலையிலே இன்றும் இருக்கின்றார்கள்.

இதனை உலகறியச் செய்வதற்காகவே த.தே.கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் அங்குள்ள மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தோம். எமது மக்கள் படும் வேதனைகளையும் சோதனைகளையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவே இவ்வார்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

வலிவடக்கு மக்களின் போராட்டமும் இவ்வாறுதான் அமைந்து காணப்படுகின்றது. தங்களது சொந்த நிலமான 6500ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்து அதற்குள் வங்கர் கட்டும் பணிகளை முடக்கிவிட்டு இருக்கின்றார்கள். இதனை தடுத்து நிறுத்தச்சென்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்முன்னே வீடுகளை இடித்து அழித்தார்கள். அந்தளவிற்கு அவர்களது அராஜகம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதேபோன்ற செயற்பாடுகள்தான் அண்மைக் காலமாகவும் எமது தாயக பூமியிலே இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே அத்துமீறி குடியேறி பயிர்ச்செய்கையை செய்து வருகின்றார்கள். இதனால் கால்நடைகளைக்கூட சுதந்திரமாக வாழவிடுவதற்கு இந்த அரசாங்கம் விரும்பவில்லை என்றே உணரமுடிகின்றது.

தற்போது வயல் நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டதனால் கால்நடைகளை கொண்டு மேய்ப்பதற்கு அனுமதியினை வழங்காமல் இராணுவத்தினர் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். எங்கோ இருந்து வந்து எமது நிலங்களை பிடித்து வைத்திருப்பவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று உரியவர்களிடம் காலக்கெடு விதித்திருக்கின்றோம்.

இதேபோன்றதொரு செயற்பாடுதான் கெவுலியாமடு பிரதேசத்திலும் பலஏக்கர் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றி அவர்களுக்கான சகல அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றார்கள்.

மாறாக எமது தமிழ் இனம் பூர்வீகமாக இருந்த இடத்தினை வழங்க மறுக்கும் அரசாங்கம் பெரும்பான்மையினரை தமிழர் பிரதேசங்களில் பலாத்காரமாக குடியேற்றி சகல வசதிகளையும் செய்து கொடுக்கின்றார்கள்.

அத்தோடு இவர்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று பிரதேச செயலாளருக்கு அரச உயர்மட்டத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கு எதிராக எமது கட்சி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது. சட்டநடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே சட்டத்தை மதிக்காது செயற்படும் போது நாம் யாரிடம்போய் சட்டத்தை எதிர்பார்க்க முடியும்.

இந்த நாட்டிலே மாறிமாறி வரும் சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. இன்று தமிழ் மக்களி;ன் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.இன்று இந்த நாட்டிலே வலுவான எதிர்க்கட்சி ஒன்று இல்லை அப்படி வலுவான எதிர்க்கட்சி இருந்திருந்தால் இந்த அரசாங்கத்தை என்றோ வீழ்த்தியிருக்க முடியும். இன்று இந்த அரசாங்கம் எதனை நினைக்கின்றதோ அதனை இலகுவாக சாதித்து விடுகின்றது.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, அன்று இருந்த நிலைமாறி மெதுமெதுவாக தனது நிலையில் இருந்து வீழ்ச்சிப் பாதையை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றது. அதனால்தான் அரசாங்கம் இன்று வீருநடைபோட்டுக்கொண்டுள்ளதுஎதிர்க்கட்சியானது பலமாக தனது நிலையை மாற்றுமாகவிருந்தால் இந்த நாட்டில் எதிர்க்கட்சிக்கு பயந்துசெல்லும் நிலையை இந்த அரசாங்கம் எதிர்நோக்கும்.

எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இழுபறி நிலையிலேயே போய்க்கொண்டிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வினை காணவேண்டும் என்று கூறும் போது எமது கட்சியினை தெரிவுக்குழுவிற்கு அழைக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பில் நிபந்தனையொன்றை தாருங்கள் என்று கேட்டால் அதனை தர மறுக்கின்றார்கள்.

நாங்கள் அங்கு தெரிவுக்குழுவில் பங்கு பற்றினால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் நன்கு தெரியும் இங்கு விமல்வீரவம்ச, சம்பிக்க ரணவக்க போன்றோர் இனவாதக் கருத்துக்களை கக்கிக்கொண்டு இருப்பவர்கள் இவர்களிடம் போய் எதனை பெறமுடியும் என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இன்று எத்தனையோ தமிழர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மாகாணசபை உறுப்பினர்களாகவும் இருக்கின்றார்கள் இவர்கள் எமது இனத்திற்காக என்ன நல்ல விடயங்களை செய்திருக்கின்றார்கள்.

இவர்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருக்கின்றார்கள் ஏன்என்றால் தங்களது கதிரைகளை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் அவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மையான விடயம் என்று கூறினார்.