பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஆறாவது கழக தினம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கழகத்தின் தலைவர் க.அகிலன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லாறு கடினபந்து விளையாட்டுக்கழகமாக பல்வேறு சேவைகளை ஆற்றிவந்த இந்த கழகம் ஆறாவது ஆண்டுடன் தனது நாமத்தினை கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் என மாற்றம் செய்துள்ளது.
இன்றை நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,மார்க்கண்டு நடராசா,பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் கௌரவிக்கப்படுவோர்களும் அதிதிகளும் பேண்ட் வாத்தியத்துடன் விழா நடைபெறும் மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து விழா மண்டபத்துக்குள் மங்கல விளக்கேற்றப்பட்டு கழக உறுப்பினர்களின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட மேடை திறந்துவைக்கப்பட்டதுடன் விளையாட்டுக்கழத்தினை சேர்ந்தவர்கள் சத்தியப்பிரமான நிகழ்வு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து விருதுபெற்றவர்கள்,சாதனை படைத்தவர்கள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இதுவரை காலமும் பெரியகல்லாற்றில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களே கௌரவிக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, மகிழுர்,மகிழுர்முனை, குருமன்வெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.சுமார் 55 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் கழக தினத்தினை முன்னிட்டு இந்த வாரம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக கழக தலைவர் அகிலன் தெரிவித்தார்.