மட்டக்களப்பு மாவட்டத்தில் 9200 ஹெக்ரயர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது-காணி பயன்பாட்டு உத்தியோகத்தர்

(எம்.எஸ்.எம்.நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9200 ஹெக்ரயர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.நஜீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை நிலங்களை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைபெற்றுள்ளன.

இதில் வவுணதிவு பிரதேச செயலாளர் பிரிவில் 5 பகுதிகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 4 பகுதிகளும், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 4 பகுதிகளும், ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பகுதியும் இதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மேய்ச்சல் தரை நிலப் பகுதிகள் எனது மேற்பார்வையின் கீழ் அடையாளப்படுத்தும் வேலைகள் நடைபெற்றன.

மேய்ச்சல் தரை நிலங்களை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டத்தில் காணி பயன்பாட்டுக்குழு உத்தியோகத்தர்கள், மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகள், வன இலாஹா அதிகாரிகள், பால் சேகரிப்பு நிலையங்களின் உத்தியேகாத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.

இதில் மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 9200 ஹெக்ரயர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனது தலைமையிலான குழுவைத்தவிர இன்னுமொரு குழு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மேய்ச்சல் தரை நிலங்களை அடையாளப்படுத்தியுள்ளன. அதன் அறிக்கை இன்னும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.