1983ஆம் ஆண்டு ஜுலைக்கு பின் தொழிலை இழந்தவர்கள் மீண்டும் தொழில்பெறும் காலம் நீடிப்பு –பொன்.செல்வராசா எம்.பி.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அரசாங்க, உள்ளுராட்சி,கூட்டுத்தாபன ஊழியர்களை மீண்டும் வேலையில் சேர்வதற்கான இறுதித்திகதி டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுநிர்வாக உள்ளுநாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அரசாங்க,உள்ளுராட்சி,கூட்டுத்தாபன ஊழியர்களை மீண்டும் வேலையில் இணைத்துக்கொள்வது என 4ஃ2006 சுற்றுப்பிரகாரத்தின் பிரகாரம் நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள்ளுநாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி 2013ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கால எல்லையினை நீடித்து தாருங்கள் என்ற கோரிக்கையினை முன்வைத்தேன்.

இந்த நாட்டில் 2009ஆண்டு மே மாதம் போர் முடிவுறுவதற்கு முன்னர் வெளிநாடு சென்று வேலையற்று இருந்த அரசாங்க ஊழியர்கள் தமது தொழிலை மீண்டும் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கிவந்தனர்.

இது தொடர்பில் 2009ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் நாடு திரும்பியவர்கள் என்னை சந்தித்து தங்களது தொழிலை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரியதையும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தேன்.எனினும் அமைச்சர் இது தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதன் அனுமதியுடன் கால நீடிப்பினை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள்ளுநாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவினால் 03-10-2013 நடைபெற்ற அமைச்சரவையில் கால நீடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சர் எனக்கு தெரியப்படுத்தினார்.

இது தொடர்பான சுற்று நிருபங்கள் அமைச்சின் செயலாளர்கள்,மாகாண செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,கூட்டுத்தாபன தலைவர்கள் ஆகியோருக்கு பொதுநிர்வாக உள்ளுநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையெழுத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த கால நீடிப்பு காரணமாக ஆயிரக்கணக்கானோர் மீண்டும் தமது தொழிலைபெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலை இழந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்குமாறும் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.