கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பதற்ற நிலைமை முடிவுக்கு வந்தது

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இன்று காலை ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.
கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலய திட்டமிடலுக்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தாருக்கும் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மறியதே இதற்குக் காரணமாகும்.

இதனால் காயங்களுக்குள்ளான பிரதி அதிபர் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பிரதிக் கல்வி பணிப்பாளரின் மோட்டார் வாகனத்தை சேதப்படுத்தியதுடன் அவர் தங்கியுள்ள அதிபர் காரியாலயத்தையும் முற்றுகையிட்டனர்.

பாடசாலைக்கு  கல்முனை பொலிஸார் விஜயம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடும் சிரமப்பட்டனர்.இந்நிலைமை மாலைவரை நீடித்தது.

பின்னர் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் அங்கு விஜயம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய திட்டமிடலுக்கான பிரதிக் கல்வி பணிப்பாளரை அழைத்துச்சென்றதுடன் மாணவர் முற்றுகை நிறைவுக்கு வந்தது.