கிழக்கின் மேய்ச்சல் தரை விவகாரத்தினை ஆராய அமைச்சர்கள் குழு விஜயம் செய்ய உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில், கால் நடைகளுக்குரிய  மேய்ச்சற் தரைக்காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கிழக்குமாகாண விவசாய அமைச்சர், காணி அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் ஆகியோர் விரைவில் விஜயம் மேற்கொண்டு நேரடியாக ஆராயவுள்ளதாக உறுதியளித்துள்ளனர்.

கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி விவசாயம் செய்யப்படுதல் வதை தடுத்து நிறுத்தி கால்நடைகளுக்கென வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தல் வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் செவ்வாய்க்கிழமை (01.01.2013) கொண்டுவந்த  தனிநபர் அவசரப் பிரேரணை நிறைவேற்றத்தின் போதே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இருந்து வரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கிழக்கு சபையில் தன்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே துரைரெட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசசெயலாளர்களினால்  வாகரை ,கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுகளில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தி ஐம்பதுஆயிரம் கால்நடைகள் மேய்வதற்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் மேய்ச்சல் தரைக் காணிகள்  ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காணிகள் பரம்பரை பரம்பரையாக மேய்ச்சல் தரையாக பாவித்து வந்தது குறிப்படத்தக்கதாகும்.
 
கடந்தகாலங்களில் அண்ணளவாக ஐம்பதுஆயிரம் ஏக்கருக்கு மேல் மேய்சல்தரைக் காணிகளை பயன்படுத்தி வந்தபோதும் குளங்களை பெரிதாக்குதல,; விவசாயச்செய்கைக்கு காணிகளை பயன்படுத்துதல் போன்றவற்றினால் மேய்ச்சல்தரைகாணிகள் குறைக்கப்பட்டுவருகின்றன .

இதனால்  ஐந்து பிரதேசசெயலகப் பிரிவுகளில்  அண்ணளவாக 45 ஆயிரம் ஏக்கருக்கு  காணிகள் குறைக்கப்பட்டு கால்நடைகளுக்கு  ஒதுக்கப்பட்டதாக அறியமுடிக்கின்றது.

குறைத்து ஒதுக்கப்பட்ட காணிகளையும் எல்லைப் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் அத்துமீறி விவசாயச்செயகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கால்நடைகள் வளர்ப்பிற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவைமட்டுமின்றி அத்துமீறி விவசாயம்  செய்கின்றவர்களினால்  கால்நடைகள்   சுடப்படுவதும், கால் நடைகளை கட்டி வைத்து  பணம் பறிப்பதும், கால்நடைகளை களவாக எடுத்துச்செல்வதும்,  கால்நடை வளர்ப்போரை இப்பகுதிக்கு வரவேண்டாம் என பாதுகாப்புத்தரப்பினர் அச்சுறுத்தல் செய்வதும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

எனவே இதை தடுத்து நிறுத்தி கால்நடை பண்ணையாளர்களை இப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவே இப் பிரேரணையைச் சபையில் கொண்டு வந்தேன். அந்த அடிப்படையில் விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், காணி அமைச்சர் விமல வீர திசாநாயக்க ஆகியோர் விஜயம் செய்து நேரடியாகப்பார்வையிட்டுத் தீர்வைப் பெற்றுத்தர உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.