கிசோ ஞாபகார்த்த தேசிய கபடிச் சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் கேகாலை அணியும் பெண்கள் பிரிவில் கம்பஹா அணியும் சம்பியன்

மட்டக்களப்பில் இடம்பெற்றுவந்த தேசிய ரீதியான மாவட்ட கபடி அணிகள் பங்குபெறும், கிசோ ஞாபகார்த்த தேசிய கபடிச் சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் கேகாலை அணியும் பெண்கள் பிரிவில் கம்பஹா அணியும் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை சுவிகரித்துள்ளதுடன் ஆண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது.
முதன்முறையாக மைக்கல்மேன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இச் சுற்றுப் போட்டியில், இலங்கையில் 25 மாவட்டங்களிலிருந்தும் 16ஆண்கள் அணிகளும், 12 பெண்கள் அணிகளும் பங்கு பெற்றின.

இச்சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு புனித மகிகேல் கல்லூரியில் சிறப்பாக ஆரம்பமானது.
இதன் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பா இடம்பெற்றது.

மைக்கல்மேன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சுலோக்சன் தலைமையில் இறுதி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவரும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால கேரத், இலங்கை கபடி சம்மேளனத்தின் செயலாளர் கெமாடோ எச்யூ. ஏ.டி, எஹெட்டியாராச்சி,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினை காலி அணியும் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு அணியும் பெற்றுக்கொண்டது.பெண்கள் பிரிவில் கேகாலை அணி இரண்டாம் இடத்தினையும் காலி அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது ஆண்கள் அணியில் சிறந்த வீரராக மட்டக்களப்பு அணியில் விளையாடிய ஆர்.சஜீவனும்,கேகாலை அணியை சேர்ந்த குரூப்பும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த போட்டிகளை கண்டுகளிப்பதற்காக பெருமளவானோர் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.