மட்டக்களப்பு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாடு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு மற்றும், வெல்லாவெளி, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இளைஞர் நாடாளுமன்றத்தின் இரு அமர்வுகளுக்கு சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தினால் அந்த மூவரும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் வெற்றிடத்திற்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடைக்கால இளைஞர் நாடாளுமன்ற தேர்தலை நடாத்தி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு அமர்வுகளுக்கு சமூகமளிக்காவிடின் தமது உறுப்புரிமையை தாமாகவே இழந்து விடுவர்; அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இம்மூவரும் தங்களுடைய உறுப்புரிமையை இழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 26870 இளைஞர்கள் இளைஞர் கழகங்களின் ஊடாக  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் 75 வீதமானோர் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களுக்கு தொழில் ரீதியாக வழிகாட்டும் நடவடிக்கை மற்றும் பல் வேறு தொழில் பயிற்சிகளையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற் கொண்டு வருகின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் சந்தை அன்மையில் நடாத்தப்பட்டு அதன் மூலம் தொழிலற்ற சில இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் இணைந்து சில சுகாதார வேலைத்திட்டங்களையும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அனர்த்த முன்னாயத்த வேலைத்திட்டங்களையும் மேற் கொண்டு வருகின்றது.

அதே போன்று இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டங்கள் மற்றும் இளைஞர்களின் சுய தொழில் நடவடிக்கைகளுக்கான நடவடிக்கைகள் என்பன மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி  திருமதி நிசாந்தி அருள்மொழி, நெஸ்கோ முகாமையாளர் பி.கிருபைராஜா, தகவல் நிலைய பொறப்பதிகாரி கே.மகேந்திரராஜா, பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.நடேசராசா உட்பட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.