ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு முதற்கட்ட தீர்வாக வட மாகாணசபைத் தேர்தலை நீதியும்; நியாயமாக நடாத்தி ஜனநாயக அடிப்படையில் நிருவாகத்திகை ஒப்படைத்துள்ள போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அப்பட்டமான இனவாதத்தைப் பேசிவருவது விரும்பத்தக்கதல்ல என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றிபெறுவார்கள் என்பது ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்திருந்தது எனினும் நாட்டில் ஜனநாயக சூழல் நிலவியதன் காரணமாக 40ற்கும் மேற்பட்ட குழுக்கள் போட்டியிட்டமை ஜனநாயகத்திற்கான எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் கூறினார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற 2013ம் ஆண்டிற்கான கலாசார விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
“சுமார் 110 வருட காலமாக தமிழ் மக்களிடமிருந்த அதிகாரப்பகிர்வு என்ற கனவு தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நனவாக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிரந்தர சமாதானத்துடன் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்ற தமிழ் மக்களது கனவு தொடர்பாக அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் நடவடிக்கைகுளம் கடந்த காலங்களில் தோல்வியையே சந்தித்துள்ளன.
இலங்கையின் வரலாற்றிலே காலத்திற்கு காலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக செய்துகொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இனவாத சக்திகளின் நடவடிக்கைகளினால் கிழித்து வீசப்பட்டன இதனால் தமிழ் மக்கள் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டனர்.
இதன் ஒரு கட்டமாக 1987ல் இந்தியாவின் தலையீடு காரணமாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஒப்பந்தமொன்றை செய்துகொண்டார். இதற்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டது. இத்தேர்தலை எல்ரீரீஈ முழுiமாக நிராகரித்ததோடு முழுமையான எதிர்ப்பையும் வெளியிட்டது. எனினும் தேர்தல் நடைபெற்று முதலமைச்சர் வரதராஜப்பெருமாளிடம் நிருவாகம் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த வேளையில் அதே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஆர்.பிறேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் வடகிழக்கு மாகாணசபைக்கு பாதுகாப்பாகவிருந்த இந்திய இராணுவத்தை வெளியேற்றினார்.
எல்ரீரீஈ னரைப் போல மாகாணசபை நிருவாகப் பகிர்விற்கு எதிர்ப்பை வெளியிட்டார். பிரபாகரனுடன் உறவை ஏற்படுத்தி 900 மில்லியன் ரூபா நிதியை மத்தியவங்கினூடாக வழங்கியதுடன் குண்டுகள் ஆயுதங்களையும் எல்ரீரீஈ யினருக்கு வழங்கினார். மாகாணசபை உறுப்பினர்களைக் கொலை செய்யத்தூண்டினார். நிருவாக முறையினைச் சிதைத்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாணத்திற்கு நீதியான நியாயமான தேர்தலை நடத்தினார்.
அவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்பட்டமான இனவாதத்தைப் பேசியது. நீங்கள் வாக்களிப்பது சிங்களவருக்கா? தமிழருக்கா? எனக் கோஷம் எழுப்பினார்கள். எனினும் நீதியான தேர்தல் மூலம் நிருவாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்கத்தை ஏற்படுத்தி செயற்படுவதன் மூலம் தமது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்றார்.







