யானைகளுக்காக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அவற்றின் பராமரிப்புக்கு விவசாயிகளின் ஒத்துழைப்புகள் போதாமல் இருப்பதன் காரணமாகவே அவை பூரணமாக பயனைப்பெறமுடியாதுள்ளதாக மாவட்டச் செயலாளரும்மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டத்திலேயே அவர் இதகைத் தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றிய அவர்,
யானை மற்றும் வனவிலங்குகளுக்கென வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்ட பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை.
இருப்பினும் அதிகமான யானைகள் மக்களின் உயிர்களைப் பறிப்பதுடன், விவசாய நிலங்களையும், அழித்து வருகின்றன.
இந்த யானைகள் மக்களைத் தொடர்ந்தும் கொன்று கொண்டிருப்பதற்கு அனுமதிக்க முடியாது. தனியன்கள் எனப்படுகின்ற யானைகள், யானைக் கூட்டங்களினால் ஒதுக்கப்பட்டவைகளாகும். இவ்வாறு யானைக் கூட்டத்தால் ஒதுக்கப்பட்ட யானைகள் மக்களைத் துன்புறுத்தினால் அவற்றுக்குத் தண்டனை இல்லை. அல்லாவிட்டால், அவற்றினை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று அவற்றைத் திருத்துவதற்கான அல்லது மருத்துவம் மேற்கொள்ளப்படுவதாவது செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில் இவ்வாறு மக்களைத் துன்புறுத்தும் யானைகளை சட்டத்தினால் திருத்த வேண்டும். சட்டம் மனிதர்களுக்கு உள்ளதுபோல் விலங்குகளுக்கும் சட்டம் உள்ளது.
யானைகளுக்காக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அவற்றின் பராமரிப்புக்கு விவசாயிகளின் ஒத்துழைப்புகள் போதாமல் இருந்ததாக முறைப்பாடுகள் உள்ளன. இருந்தாலும் விரைவாக நிரந்தரமான முடிவுகள் யானைகள் தொடர்பில் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட விவசாயப்பணிப்பாளர் யு.உகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சி,யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கே.துரைராசசிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, ஜீ.கிருஸ்ணபிள்ளை, பதில் பிரதேச செயலாளர் திருமதி எம்.நவரூபரஞ்சினி, நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எஸ்.மோகன்ராஜா, காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் கே.விமல்ராஜ், விவசாயக்காப்புறுதி முகாமையாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.