கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 01மணி வரை மாணவர்கள் பதாகைகளை ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளின் காலக்குறைப்பினை நிறுத்தக்கோரி முதல் தடவையாக கவன ஈர்ப்பாகவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது துண்டுப்பிரசுரம் ஒன்றும் மாணவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டன.இதன்போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எங்களுக்கு எப்போது நோய் வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்போது நாங்கள் படும் வேதனை நமக்குத் தெரிந்ததே.இதனால்தான் சுகாதார சேவை மிக முக்கியம். உண்மையாகவே இன்று எமக்கு சுதந்திரமான சுகாதார சேவை உள்ளதா? அனைத்திற்கும் பணம் தேவைப்படும் இவ்வுலகில் சுதந்திரமான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள முடிகிறதா? இன்று வைத்தியசாலைக்கு வரும் எமது சொந்தங்கள் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்கிறார்களா? எத்தனை மருந்து வகைகளை மருந்தகங்களிலிருந்து பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும்?
அதுமட்டுமல்ல இன்று உலகளவில் பரந்து காணப்படும் போலியான மருந்து உற்பத்தி நிறுவனங்களால் பல நோய்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று நாம் உயிர்வாழ்வது அவர்களின் இலாபத்துக்கே. இந்த சமூக நிலைப்பாட்டால் எங்கள் வாழ்க்கையும் சுகாதார சேவையும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல் இந்த சமூகநிலை மாணவர்களாகிய எங்களுக்கும் பிரச்சனை கொடுக்கிறது. அதுதான்(3+1) சாதாரண மற்றும் சிறப்புப் பட்டத்தினைப் பெறுவதில் ஏற்பட்ட காலக்குறைப்பு.
என்ன இந்த (3+1) பிரச்சனை? 2006ம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தாதியியல்(Nursing), மருந்தகவியல்(Pharmacy), மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம்(Medical laboratory science), இயன் மருத்துவம், ஊடுகதிர் படமெடுப்பு ஆகிய கற்கை நெறிகள் சிறந்த பயனுள்ள சுகாதார சேவையை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டவை.
உயர்தர உயிரியல் பிரிவு மாணவர்கள் உயர் ண-புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியிருப்பது நான்கு வருட விசேட பட்டத்தைப் பெறுவதற்கே(யாழ்ப்பாணம்,பேராதனை, ஸ்ரீஜயவர்த்தனபுர, உருகுணு மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகம்). ஆனால் 2010ம் ஆண்டிலிருந்து மேற்குறித்த கற்கை நெறிகள் 4 வருடத்திலிருந்து 3 வருடம் சாதாரண பட்டத்திற்கான கற்கைநெறி, ஒரு வருடம் சிறப்பு பட்டத்திற்கான கற்கை(3+) என மாற்றப்பட்டுள்ளது. இதுவே பிரச்சனைக்கான காரணமாகும்.
நான்கு வருட கற்கை நெறி அனைத்து மாணவர்களுக்கும் உரியதே. இருந்தபோதும் சுகாதார சேவையிலுள்ள நிர்வாகிகளின் சூழ்ச்சியால் விசேட பட்டத்தைப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது.அதாவது சாதாரண பட்டத்திற்கான கற்கைநெறிக்காலத்தில் குறித்த சராசரிப்புள்ளிககு மேல் தேர்ச்சியடையத் தவறுகின்ற மாணவர்கள் சிறப்பு நிபுணத்துவப்பட்டத்துக்கான கற்கைகளை மேற்கொள்வதற்கான சந்தற்பத்தை இழக்க நேரிடும். இதனால் நான்காம் வருடத்தில் தாதியியல் மற்றும் ஏனைய சுகாதார விஞ்ஞான கற்கை நெறியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நிபுணத்துவம்பெற முடியாமல்போகும்நிலையுள்ளது.
எமது கற்கைநெறியின் முறையற்ற ஒழுங்குபடுத்தலாலும் நிர்வாகிகளின் கொள்கைகளினாலும் மாணவர்களாகிய எங்களின் வாழ்க்கை பெரும் இக்கட்டான நிலையிலுள்ளது. இந்த நிர்வாகிகளின் சூழ்ச்சிகளால் உருவாக்கப்படும் அறிவு குறைந்த சுகாதார உத்தியோகத்தர்களால் இந்த நாட்டுமக்களின் வாழ்க்கையும் கூட அபாயத்தை நோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றது.
இதேபோல் கற்கைநெறியைப் பூர்த்தி செய்தபின்னரான 6 மாதகால உள்ளக தொழிற்பயிச்சியும் பறிப்பதற்கு இந்த நிர்வாகிகள் தயாராகவுள்ளனர்.
கடந்தமாதம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எமது 6 மாதகால உள்ளக தொழிற்பயிச்சிக்குப்பதிலாக புதிய கற்கை நெறியை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி மாணவர்கள் சுகாதார அமைச்சரிடம் வினவியபோது அவர் கூறியதாவது இது தன்னுடைய தவறில்லை எனவும் வேறுசில பகுதியினரால் ஏற்படுத்தப்பட்ட தவறெனவும் கூறி கேள்வியிலிருந்து தப்பிக்கொண்டார்.
சுகாதார குழு என்பது அனைத்து சுகாதார சேவகர்களின் ஒன்றிணைப்பே. ஆனால் இவர்கள் இதனைப் புரியாமல் பிரிந்து செயற்படுவதனால் எங்கள் பிரச்சனைக்கான சரியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.
இதுபோல் சுகாதார பிரிவில் பல பிரச்சனைகள் உருவாக்கப்பட்டது இனியும் உருவாக்கப்படும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றஇ கல்வியை தனியார்மயமாக்குவதன் மூலம் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற, எமது நோயால் இலாபம் பெறுகின்ற நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் இந்த நிர்வாகிகளுக்கு எதிராகச் செயற்படும் எங்களுடன் கைகோர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.