பேராசிரியர் மு.இராமசாமியுடன் ஒரு நாள்

(செந்தூரன்-SVIAS)

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 2013-08-24 அன்று நாடகத்துறை மற்றும் நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் மு.இராமசாமியுடனான சந்திப்பு இடம் பெற்றது.


இச்சந்திப்பில் நாடகத்துறை, மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் போன்றோர் இணைந்து கொண்டனர்.

நாடகம் பற்றிய தெளிவுரைகளை வழங்கிய தமிழ் நாட்டுத் தஞ்சைப் தமிழ் பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியரும் நிஜ நாடக இயக்கத்தின் ஸ்தாபகருமாகிய மூரா என்றழைக்கப்படும் மு.இராமசாமி இந்திய நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான நாடகச் செயற்பாட்டாளராவார்.

இவரின் நெறியாள்கையில் உருவான பெரியார்,கலிலியோ, ஸ்பாட்டகஸ் போன்ற பல நாடகங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. மேலும் இவர் மாயன்,பிதாமகன்
, பருத்திவீரன்,  சண்டக்கோழி, ராம் போன்ற தமிழ் சினிமாத் திரைப்படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிட்டாக வேண்டிய விடயமாகும்.

இச்சந்திப்பு  நிகழ்வில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், பங்கு கொண்டவர்களின் விருப்பத்திற்கு அமையவும் பேராசிரியர் மு. இராமசாமி பழம்பெரும் தமிழ் நாடக இலக்கியங்கள் பற்றி கருத்துரைகள் வழங்கினார். அதற்கமைய ஆரம்பத்தில் தொல்காப்பியம் பற்றி கருத்துரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தேனீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய சந்திப்பில், ஐம்பெரும் காப்பியங்களுள் தனித்துவம் மிக்க நாடகக்காப்பியமான சிலப்பதிகாரம் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் பேராசிரியர் தெளிவுரை ஆற்றினார்.

சிலப்பதிகாரத்தின் தனித்துவமான சிறப்புக்கள், நாடகக்காப்பியம் என கூறுவதற்கான காரணங்கள் நாடகச் சிறப்புக்கள் (மோதுகை,பாத்திர வார்ப்பு, நடிப்பிற்கான தளம்) என்று உதாரணங்களோடு உணர்ச்சி பூர்வமாக விளக்கமளித்தமை கேட்டுக் கொண்டிருந்தவர்களை பிரமிப்ப+ட்டியது. பின்னர் இது தொடர்பாக வினாக்கள் தொடுக்கப்பட்டு விடைகள் அளிக்கப்பட்டதுடன் காலை அமர்வு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மதிய இடைவேளைக்காக அனைவரும் சென்றனர்.

மதிய உணவைத்; தொடர்ந்து மாலை அமர்வில் மூராவின் நெறியாள்கையில் உருவான திருநங்கையர் நாடகமான வலி அறுப்பு மற்றும் இவர் நடித்த  வியாபாரமாயணம் (கதை - மு. இராமசாமி, நெறியாள்கை - ராஜிவ் கிருஸ்ணா) ஆகிய இரண்டு நவீன நாடகங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடலும் இடம் பெற்றது.

மிகச்சிறந்த நாடக ஆளுமையான பேராசிரியர் மு.ராமசாமியிடம் இருந்து காலை அமர்வில் ஆழமான விரிவுரையினையும் மாலை அமர்வில் நவீன நாடகங்களின் காட்சிப்படுத்தலினூடாக நடிப்பு மற்றும் ஆக்கத்திறன் நுட்பங்கள் பற்றிய சில விடயங்களையும் நிறைவாக அறிந்து கொண்டமை யாரும் மறக்க முடியாததும், தவிர்க்க இயலாததுமான தருணமாக அமைந்தது.

பேராசிரியர் இந்த வயதில் இளமையாகவும்;. சுறுசுறுப்பாகவும் இருந்தமை அவரைப் பார்த்து. பழகி உணர்ந்தவர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்ததோடு, அவர் எங்களுடன் அணுகிய விதம், எளிமை
, வெளிப்பாட்டுத் திறன் போன்றன அவரின் மேல் உள்ள மரியாதையை  இன்னும் அதிகரிக்கச் செய்தது.

அன்றைய சந்திப்பின் முடிவில் நாங்கள் நன்றியுடன் பேராசிரியரை அணுக, அவர் வருகை தந்தவர்கள் அனைவரையும் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்து விடை பெற்றுச் சென்றார்.

ஆத்மார்த்தமாக நாடகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற புலமைமிக்க நாடகக்காரர்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதானது வளர்ந்து வரும் நாடகச் செயற்பாட்டாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. இச் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு இது போன்ற சந்தர்ப்பங்கள் தொடர வேண்டியது அவசியமாகும்.