மாவற்குடா தேர் உற்சவம் -ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பிரசித்திபெற்ற ஆலயமாகவும் தேரோடும் ஆலயமாகவும் உள்ள பழுகாமம் மாவற்குடா ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது.

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று இடம்பெற்ற இந்த தேர் உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கடந்த 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று சப்புரத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை தம்பத்துக்கு விசேட அபிஸேகம் மற்றும் பூசைகள் செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கு விசேட விசேட பூசைகள் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து தேரடிக்கு சுவாமி வீதியுலா வந்ததுடன் தேரடியில் விசேட பூசைகள் செய்யப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடம்பிடித்துவர தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.