மண்டூரில் இருந்து வெருகல் நோக்கிய பாதையாத்திரை ஆரம்பம்

(தவக்குமார்)

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பமாகியது.

இந்த பேரணியானது 2013.09.23ம் திகதி திங்கட்கிழமை வெருகலம்பதி சித்திரவேலாயுத ஆலயத்தை சென்றடையவுள்ளது. இந்த ஆன்மீக பாதயாத்திரையை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்மீக யாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் மண்டூர் முருகனாலயத்தில் விசேட ப+சை நடைபெற்று முருகப்பெருமானை தரிசித்த பின்னர் ஆரம்பமானது.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான யாத்திரிகர்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் காலை உணவளிக்கப்பட்டது.

இந்த யாத்திரைக்கு பாராளமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் தலைமைதாங்கியிருந்தார்.

மண்டூர் கந்தசுவாமி ஆலயம், கிரான்குளம் சித்திவினாயகர், ஆலயம் புதுக்குடியிருப்பு சித்தி வினாயகர் ஆலயம், கீரிமடு சித்திவினாயகர் ஆலயம்,மயிலம்பாவெளி சித்திவினாயகர் ஆலயம், ரமேஷ்புரம் சித்திரவேலாயுதர் ஆலயம் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம், வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம், வாகரை சிவமுத்துமாரியமன் ஆலயம் புளியங்கண்டலடி மகாமாரியமன் ஆலயம், கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயம் ஆகிய இடங்களில் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் குறிப்பிடப்படும் ஆலயங்களில் தங்கி இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.