உலகத் தமிழியல் மாநாட்டில் கி.ப.கழக முதுநிலை விரிவுரையாளர் றூபி வலன்ரீனா உரை

இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தினால் (WORLD RESEARCH CENTRE FOR TAMLOLOGY  - LONDON) இலண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை உலகத் தமிழியல் மகாநாடு நடத்தப்பட்டது.
இலண்டன் School of Oriental and African Studies, University of London இல் நடைபெற்ற இம் மகாநாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி. றூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொண்டு  "தமிழ் மொழியின் முதல் அச்சு நூல் : தம்பிரான் வணக்கம் - ஒரு நோக்கு" என்னும் தலைப்பில்  ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.
கத்தோலிக்க சமயத்தின் அடிப்படை உண்மைகளையும் தத்துவங்களையும் சுருக்கமாக அறிமுகம் செய்யும் Doctrina Chiristam  என்னும்; நூல் போர்த்துக்கேய மொழியில் மார்க்கோஸ் ஜோர்ஜ் அடிகளாரால் எழுதப்பட்டது. இதனை  பீற்றர் மனுவேல் அடிகளும் ஹென்றிக் ஹென்றிக்குயிஸ் அடிகளும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்து 'தம்பிரான் வணக்கம்' என இந்நூலுக்குப் பெயரிட்டனர். இந்திய மொழிகளிலேயே முதலில் அச்சிடப்பட்டதும் தமிழ் மொழியில் முதலாவதாக அச்சிடப்பட்டதும் இந் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பிரான் என்பது இங்கு சர்வேஸ்வரன் அல்லது கடவுள் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் பற்றிய விபரங்களை முதலில் வெளிப்படுத்தியவர் வண. தனிநாயகம் அடிகள் என்பது குறிப்பிடத்தக்கதுடன் அவரின் ஜனன நூற்றாண்டு தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருவது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.