அபிவிருத்தியென்பது தனியே உட்கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்திக்கொடுப்பதல்ல- மாவட்ட அரசாங்க அதிபர்

அபிவிருத்தியென்பது தனியே உட்கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்திக்கொடுப்பது மட்டுமல்ல.அதற்கு மேலாக 30வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு அவர்களின் தேவையினை நுணுக்கமாக ஆராய்ந்து சேவையாற்றவேண்டும்.அதனை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்கு என்னும் தலைப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த காலங்களில் பல இன்னல்களான காலகட்டத்தில் நாங்கள் பலியாகியிருக்கின்றோம்.கடந்த காலத்தில் உள்ளூர்,சர்வதேச ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக கடினமான பாதைகளைக்கடந்து முழுமையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அமைச்சரவையின் வழிகாட்டலில் இந்த மாவட்டத்தின் முழுமையான அபிவிருத்திக்காக முன்னின்று செயற்பட்டுவருகின்றோம்.

எங்களது மக்களோடு பேசுவதற்காக நீங்கள் எங்களுக்கு அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை பார்க்கின்றோம்.
இந்த நாட்டிலேய இந்த மாவட்டத்திலே முன்னெடுக்கப்படும் சரியான விடயங்கள் மக்களுக்கு தேவையான விடயங்கள்,மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் உங்கள் ஊடாக எதுவித பாகுபாடும் இன்றி நடுநிலைமையுடன் தெரிவிக்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

நான் இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல அனர்த்தங்கள் இடம்பெற்ற பல இடங்களில் சேவையாற்றியுள்ளேன்.அனர்த்தங்களின்போது ஊடகங்கள் சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தது.

எது மக்களுக்கு முக்கியமானது,எது நிர்வாகத்துக்கு முக்கியமானது எதனை எவ்வாறு சொல்லவேண்டும் என்ற யதார்த்தம் ஒன்று உள்ளது.அந்த அடிப்படையில் உங்கள் பணி இருக்கவேண்டும் என விரும்புகின்றோம்.இதற்காக நீங்கள் ஆற்றிய பணிக்காகவும் நீங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்காகவும் விசேடமாக இதன்போது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதேச ஊடகவியலாளர்கள் பத்திரிகைகளில் சொல்வதை விட பல பிரச்சினைகளை என்னுடன் தொடர்புகொண்டு பேசி பல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுள்ளனர்.சில கசப்பான விமர்சனங்களும் இருக்கின்றன.அவற்றினை நாங்கள் மறந்தாலும் உண்மையும் நேர்மையும் இருக்கவேண்டும் என்பதுடன் உங்களின் முழுமையான ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்றோம்.

அபிவிருத்தியென்பது தனியே உட்கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்திக்கொடுப்பது மட்டுமல்ல.அதற்கு மேலாக 30வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு அவர்களின் தேவையினை நுணுக்கமாக ஆராய்ந்து சேவையாற்றவேண்டும். நாங்கள் அதனை செய்துவருகின்றோம்.

இந்த மாவட்டத்தில் எங்களுக்கு சவாலாக இருப்பது பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களின் தொகை,சிறுவர்,பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள்,சிறுவர்,பெண்கள் துஸ்பிரயோகம்,அளவுக்கு மிஞ்சிய போதைபாவனை,மதுபாவனை இதனைவிட வயதுக்கு முந்திய திருமணம்,வயதுக்கு முந்திய கர்ப்பம் இதுபோன்ற விடயங்களிலும் யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விதவை பெண்கள்,வலுவிழந்தோர்,வயதுமுதிர்தோர் விடயங்களில் நாங்கள் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டுவருகின்றோம்.

அரசாங்கம் வழங்கிய சகல உட்கட்டமைப்பு வசதிகள் ஊடாக பாரிய மாற்றங்களை இந்த செயற்பாடுகளில் ஏற்படுத்தியுள்ளோம்.

இருந்தபோதிலும் இந்த விடயங்களில் மிகவும் நுணுக்கமாக பாதுகாப்பு குழுக்களை அமைத்து பிரதேசம்,கிராமங்கள் தோறும் இந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் நாங்களும் இங்குள்ள கல்வித்துறையினரும் விசேடமாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,அதன் உள்வாரி மாணவர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளோம்.

எனவே இந்த மாவட்டத்தின் வறுமை நிலை மட்டுமல்ல மக்களின் வாழ்க்கைதரத்தையும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.