குருக்கள்மடம் பகுதியில் சட்ட விரோத மதுபான போத்தல்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஆம்பிளாந்துறை இயந்திரப்படகு சேவையூடாக படுவான்கரை பகுதிக்கு கடத்தப்படவிருந்தவேளையிலேயே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பி.ரி.நஷீர் தெரிவித்தார்.

குpடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குருக்கள்மடம் துறையடிப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தலைமையில் சென்ற குழுவினர் இந்த மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் அதிகளவில் விற்பனைசெய்யப்படுவதால் மது பாவணை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போதே சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக பதில் பொறுப்பதிகாரி பி.ரி.நஷீர் தெரிவித்தார்.

விசேடமாக படுவான்கரை பிரதேசத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்கள் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.