ஆரையம்பதியில் மீண்டும் சிலை உடைப்பு –கையுமெய்யுமாக சிக்கினார் ஓட்டமாவடி நபர்

ஆரையம்பதி பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியின் சிலையினை 23.09.2013ம் திகதி நள்ளிரவில் உடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த நியாஸ் என்பவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரையம்பதி பிரதான வீதியில் சமூகப் பெரியார்களின் திருவுருவச்சிலைகள் தமிழர்களின் கலாசாரப் பிண்ணனியுடன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கபட்டுள்ளது.

இதில் கி.மு 513ம் ஆண்டளவில் மண்முணையினை தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த உலக நாச்சி மட்டக்களப்பின் முதலாவது சிற்றரசி என்பதனால் அவரினை நினைவு கூறும் முகமாக திருவுருவச்சிலை ஆரையம்பதி பொதுச் சந்தைக்கு முன் அமைக்கப்பட்டிருந்தது.

23.09.2013ம் திகதி நள்ளிரவு ஓட்டமாவடியைச் சேர்ந்த நியாஸ் என்பவர் சிலை உடைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் நடமாடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காத்தன்குடி பொலிஸார் குறித்த நபரினை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
ஆரம்ப விசாரணையின் போது தான் தமிழர் என அடையாளப்படுத்த முற்பட்ட வேளையிலும் பொலிஸாரின் தீவிர விசாரணையின் பின்னர் ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.

இது போன்றே 2012.01.10ம் திகதி நள்ளிரவில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலையும் உடைக்கப்பட்டது. இதிலும் காத்தன்குடியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.