வெளிநாட்டு படையினருடன் இலங்கை படையினர் கிழக்கில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, சல்லித்தீவு ஆகிய பிரதேசங்களில் இந்த கூட்டு போர்ப் பயிற்சிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
6 நாடுகளை சேர்ந்த 6 இராணுவ கண்காணிப்பாளர்கள், வெளிநாடுகளை சேர்ந்த 40 படையினர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போர்ப் பயிற்சியில் கிழக்கு மாகாண படைகளின் தலைமையகங்களை சேர்ந்த முப்படையினர் 2700 பேர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போர்ப் பயிற்சியில் விமானப் படையினரின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரம் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதன்போது பிரதேசத்திற்கு மேலாக கிபீர் விமானங்கள் பறந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதேவேளை ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் இன்று 23.09.2013 அதிகாலை 5.00 மணிமுதல் இராணுவத்தின் யுத்த பயிற்சி ஒத்திகை இடம்பெற்றது.
இன்று அதிகாலை 5மணிக்கு ஆரம்பமான இப்பயிற்சி ஒத்திகை 6.45 மணிவரை நடைபெற்றது.
இப்பயிற்சி ஒத்திகையின் போது இலங்கை கடற்படையின் யுத்ததாங்கி கப்பல்கள், டோர படகுகள், இலங்கை விமானப்படையின் கிபீர் விமனம், உலங்கு வானூர்தி என்பன ஈடுபடுத்தப்பட்டது. சுமார் 500ற்கும் மேற்பட்ட இரானுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
மாதிரி இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இப்பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதிகாலை வேளையில் கிபீர் விமானத் தாக்குதல்கள், உலங்கு வானூர்தியின் பிரசன்னங்கள் ஏறாவூர் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை தோற்றுவித்தாலும் பொருந்திறலான மக்கள் இவ் இராணுவ ஒத்திகையை பார்வையிட வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் மக்கள் பயிற்சிகளை கண்டுகளிக்க இரவே கடற்கரைக்கு வந்து தங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.