அரசியலுக்கு அப்பால் சேவையாற்றவே நான் விரும்புகின்றேன்.மட்டக்களப்பு மாவட்டத்தினை சிறந்த நிலைக்கு கொண்டுவருவதே எனது நோக்கம்.இதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை,சுதந்திரங்களை அரசாங்கம் வழங்கிக்கொண்டே உள்ளது.தேர்தல் மூலம் தங்களை ஆளும் உரிமையை அரசாங்கம் வழங்கிகொண்டுள்ளது.வடமாகாணத்தில் தேர்தலை அரசாங்கம் நடத்தமாட்டார்கள் என்று கூறிவந்த நிலையில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தேர்தல் நடத்த நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் விநியோகம் அற்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தின் உதயபுரம் பிரதேசத்தில் மூன்று வீதிகளுக்கான மின் விநியோகம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
புpரதியமைச்சரின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் மூன்று பகுதிகளுக்கான மின் விநியோக நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைவர் சீவரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி பிராந்திய மின் அத்தியட்சர் அனுசாந்த் மற்றும் பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய தலைவர் சீ.செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாடசாலை குறுக்கு வீதி,எல்லை வீதி,ஆலையடி வீதி ஆகிய பகுதிகளுக்கா மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இப்பிரதேசத்தினை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.