மாடு குறுக்கால் பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் வந்தோர் விபத்து-புதுக்குடியிருப்பில் சம்பவம்(PHOTOS)

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 7.30மணியளவில் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் முன்னர் விசேட அதிரடிப்படையினர் முகாம் இருந்த பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றுகொண்டிருக்கும்போது மாடு ஒன்று திடிரென பாய்ந்ததன் காரணமாக இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாக ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இதேவேளை இப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் காரணமாக அதிகளவிலான விபத்துகள் இடம்பெற்றுவருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தடவைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்தும்,அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்தும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.