சந்திவெளியில் நிகழ்ந்த மகிடிக் கூத்து பார்வையும் பதிவுகளும்

(துரை.கௌரீஸ்வரன்)

ஈழத்தமிழர்களிடையே பயில் நிலையிலிருந்து வரும் பாரம்பரிய நிகழ்த்து கலைகள் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான சமூகப் பங்களிப்பினை வழங்கி வருவதாக கூத்து மீளுருவாக்கக் கொள்கை வலியுறுத்தி நிற்கின்றது.

அதாவது பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களை பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கும் விதத்திலிருந்து விலகி இக்கலைகள் இன்றைய சவால்களை எதிர்கொண்டு வாழ்வதற்கான பொறிமுறைகளுடன் காணப்படுவதைப் பிரதானப்படுத்தி அதனை காலத்திற்கேற்ப மீளுருவாக்கி முன்னெடுக்கும் கொள்கையாக கூத்து மீளுருவாக்கம் எனும் கருத்தியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயல்வாதக் கருத்துநிலை நின்று எமது பாரம்பரிய நிகழ்த்து கலைகளை நோக்கும் போது அவற்றின் இன்றைய சமூகப் பெறுமானத்தை உணர்ந்தும் அறிந்தும் கொள்ள முடிகின்றது.

இந்த வகையில் எமது பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களுள் ஒன்றான மகிடிக் கூத்துக்களின் முக்கியத்துவத்தினைப் பார்க்கும் போது, இன்றைய சூழலில் எளிமையாகவும் அதே நேரம் மிகவும் வலிமையாகவும் ஊர் மக்களை ஒன்றிணைத்து தமது ஊர் மக்களின் வரலாற்றுணர்வையும் உள்மன அபிப்பிராயங்களையும் மிகவும் அங்கதமாகவும் நையாண்டித் தனமாகவும் வெளிப்படுத்திச், சிந்திக்கத் தூண்டும் மக்கள் அரங்காக மகிடிக் கூத்தரங்கு விளங்குவதனைக் காண முடிகின்றது. ஒவ்வொரு ஊரினதும் மகிடிக் கூத்துக்கள் அவ்வூரின் வரலாற்றுணர்வையும் அவ்வூர் மக்களின் சிந்தனைப் போக்கினையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஊரில் வாழ்கின்றவர்களுக்கும் வெளியிலிருந்து ஊருக்குள் நுழைபவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை மந்திர தந்திர மதிநுட்பங்க@டாகத் தீர்த்துக் கொள்ளும் கதையே மகிடிக் கூத்தில் நிகழ்த்தப்படுகின்றது. சில ஊர்களில் ஊரில் இருப்பவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களுடன் எவ்வித விட்டுக் கொடுப்பிற்கும் செல்லாது அவர்களை வெற்றி கொள்வதாகவும்,சில ஊர்களில் வெளியிலிருந்து வருபவர்களுடன் விட்டுக் கொடுத்து சமரசம் செய்வதாகவும் முடிவுகள் அமைந்துள்ளன.

இவ்வாறு விட்டுக்கொடுக்காமலும்,விட்டுக் கொடுத்தும்; செல்லுகின்ற இரு வேறுபட்ட மனோ நிலைகளுக்கு அவ்வூர்களின் சமூக,பொருளாதார,அரசியல்,வரலாற்றுப் பண்பாட்டம்சங்கள் காரணங்களாக இருந்து வந்துள்ளன எனலாம்.

உதாரணத்திற்கு பொருளாதார ரீதியில் தன்னிறைவுடனும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடனும், நாடோடிகளாகவன்றி தொடர்ச்சியாக நிலைத்து வாழும் வரலாற்றினைக் கொண்டவர்களாகவும் வாழும் சமூகங்களிடையே ஆடப்படும் மகிடிக் கூத்துக்களில் ஊரில் உள்ளவர்கள் வெற்றிபெறும் கதை முடிவாக அமைகின்றது.

நாடோடிகளாக வந்து பின்னர் நிலையாக வாழத் தொடங்கிய வரலாற்றினைக் கொண்ட சமூகங்களில் ஆடப்படும் மகிடிக் கூத்துக்களில் வெளியிலிருந்து வந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து இணங்கிப் போகும் முடிவுகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாக உள்ளன.இவ்வாறே ஊரிலுள்ள அதிகாரம் மிக்க தரப்புக்களின் நடவடிக்கைகள் முரண்பாடுகள் தோன்றும் போது எவ்வாறு அமைந்திருக்கும் என்பதும் அங்கதமாக வெளிக்காட்டப்படுகின்றது.

அதாவது அதிகாரத் தரப்புக்கள் முரண்பாடுகள் வரும் போது அம்முரண்பாடுகளைத் தமது நலன்களுக்குச் சாதகமான வகையில் பயன்படுத்தும் சந்தர்ப்பவாத மனோ நிலை மகிடிக் கூத்துக்களில் வெளிக்காட்டப்படுகின்றன.இத்துடன் அதிகார வர்க்கத்தினர் மீதான சாதாரண மக்களின் மனோ நிலை அதிகாரத் தரப்பினரை கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கோமாளியாக சித்தரிக்கும் தன்மையினூடாக வெளிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு ஒரு சமூகத்தின் சமூக,பொருளாதார,அரசியல்,வரலாற்று பண்பாட்டமசங்களையும், அவை தொடர்பான கருத்து நிலைகளையும் வெளிக்காட்டும் முக்கியமான நிகழ்த்து கலையாக மகிடிக் கூத்தரங்கு அச்சமூகங்களில் வாழ்ந்த புலமையாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் மட்டக்களப்பு சந்திவெளி எனும் ஊரில் ஆடப்பட்ட மகிடிக் கூத்து அமைந்துள்ளது.இதனை மேலும் விளங்கிக்கொள்ள கூத்தின் ஆற்றுகையிளை விபரித்தல் அவசியமாகியுள்ளது.

மகிடிக் கூத்து விவரணக் குறிப்பு

கடந்த 21.04.2013 ஆந் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி எனும் ஊரில் மகிடிக் கூத்து ஒன்று ஆடப்பட்டது.சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் வகையில் இவ்வூரைச் சேர்ந்த பாரம்பரியக் கலைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இக்கூத்து நிகழ்த்தப்பட்டிருந்தது.பிற்பகல் மூன்று மணியளவில் இவ்வூரின் புகையிரதப்பாதையை அண்டியுள்ள குடியிருப்புக்களும் பற்றைக் காடுகளும் சூழ்ந்த ஒரு வெளியில் அதற்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த ஆற்றுகையிடத்தில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டது.
 ஆற்றுகையிடத்தினைச் சுற்றி பார்வையாளர்கள் நின்றும் இருந்தும் பார்ப்பதற்கேற்ற விதத்தில் வட்ட வடிவத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது.

ஆற்றுகையிடத்திற்குள் மத்திய பகுதியில் கமுக மரம் ஒன்று நடப்பட்டிருந்தது அம்மரத்தின் முன்னால் பெரிய கும்பம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது இக்கும்பத்தினைச் சுற்றி நான்கு பூசாரிகள் போன்று வேடமணிந்த சிறுவர்களும் கமுக மரத்தின் முன்னாலே ஒரு சிறுவனும் ஆக மொத்தம் ஐந்து சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள் கமுக மரத்தின் மற்றைய பகுதியில் மூன்று கிடங்குகள் வெட்டப்பட்டு அதன் மேற்பகுதியில் அதற்குள் நிற்பவர் தெரியாத வகையில் சீலையால் மறைக்கப்பட்டிருந்தது இக்கிடங்குகளின் முன்னால் கமுக மரத்தினை நோக்கியபடி ஒருவர் பின் ஒருவராக உதவிப் பூசாரியும் தலைமைப் பூசாரியும் (முனிவர்கள் என்றும் கூறினர்)தியானத்தில் மூழ்கியிருந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் ஆதி மனிதர்கள் (வேடுவர்கள் அல்லது குறவர்கள்) போல் வேடமணிந்த மனிதக் கூட்டத்தினர் தமது செல்லப்பிராணிகளான குரங்குகள்,பாம்புகள் சகிதம் (குரங்காக சிறுவர்கள் பங்குபற்றினர்) ஆற்றுகையிடத்தின் சற்றுத் தூரத்தில் காணப்பட்ட பற்றைக்காடுகளிற்குள்ளிருந்து ஆற்றுகை இடத்தை நோக்கி வருகை தந்தார்கள் அவர்களது வருகையினைப் பார்வையாளர்கள் மிகவும் சுவாரசியமாக ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தார்கள் அவர்கள் பார்வையாளர்களுடன் சுவாரசியமாக உரையாடினார்கள்.

இவ்வேளையில் ஊரின் உடையார் எனக் குறிக்கப்பட்ட ஒருவர் தனது உதவியாளுடன் ஆற்றுகையிடத்தில் வந்து புதிதாக ஊருக்குள் நுழைந்துள்ள ஆதி மனிதர்களுடன் உரையாடுவதும் பின்னர் தவத்திலிருக்கும் பூசாரிகளுடன் உரையாடுவதுமாக இயங்கிக் கொண்டிருந்தார் உடையாரின் நடவடிக்கைகள் சிரிப்பூட்டும் வகையில் அமைந்திருந்தன.

 உடையாரிடம் என்ன பிரச்சினை எனப் பார்வையாளர்கள் பலர் வினவியபோது “இஞ்ச புதிசா வந்துள்ள ஆதிமனிதர்கள் இந்தா இருக்கும் பூசாரிமாரைத் தமது மந்திர வித்தைகளால் கட்டுப்படுத்தி வெல்லப் போவதாக கூறுகின்றார்கள் அதத்தான் நான் பூசாரிமாரிட்ட சொன்னனான் இப்ப பூசாரிக்கும் வந்திருக்கிற ஆக்களுக்கும் மந்திர தந்திர போட்டி நடைபெறப்போகிது ஆரு வெல்லுவாங்க என்று பாருங்களன்”எனக் கூறிய பின்னர் பிற பார்வையாளர்களிடம் சென்று கொண்டிருந்தார்.

உடையார் சொன்னபடி ஆதிவாசிகள் ஒன்றிணைந்து மந்திர தந்திரங்களால் பூசாரிகளின் உதவியாட்களாக வீற்றிருந்த சிறுவர்களை மயக்கமடையச்செய்தார்கள் இதன்பின்னர் ஆதிவாசிகள் ஆற்றுகையிடத்தினைச் சுற்றி பார்வையாளர்களுடன் உரையாடியபடி ஒரு வலம் வந்து பின்னர் மீண்டும் பூசாரிகளுடன் மந்திர தந்திர வித்தைகளுக்குத் தயாராகினர் இச்சந்தர்ப்பத்தில் ஆதி வாசிகளின் பெண்களை பூசாரிகள் மந்திர வித்தைகளால் தமது பக்கம் கவர்ந்து இழுத்துக் கொண்டு  ஆதிவாசிகளை ஒருவருடன் ஒருவரை ஒட்டச்செய்து ஆதிவாசிகளுக்கு முன்னாலே அவர்களுடன் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்து கொண்டிருந்தனர் ஆதிவாசிகள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு சில நிமிடங்கள் நிலத்தைக் கிண்டுபவர்களாகப் பாவனை செய்து கொண்டிருந்தார்கள் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து தமது பெண்களை நினைத்து வேதனையும் கவலையும் அடைந்தவர்களாக பாவனை செய்து ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் பூசாரிகளுடன் மந்திர தந்திர வித்தைப் போரிலீடுபட்டு மீண்டும் தமது பெண்களை அழைத்துக் கொள்வர் பூசாரிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த ஆதிவாசிப் பெண்கள் பூசாரிகளை உதைத்துத் தள்ளிக் கொண்டு தமது இனத்தாருடன் இணைந்து கொள்வர.;
இதையடுத்து ஆதிவாசிகள் பெரிய கும்பத்தினை எடுக்கும் முயற்சியிலீடுபடுவர் அதைத்தடுக்க பூசாரிமார் மந்திர வித்தைகளை செய்வதாகப் பாவனை பண்ணுவர் ஆதிவாசிகள் கும்பத்தினை நெருங்கிய போது கும்பம் திடீரென சூழன்றுகொள்ளும் பின்னர் மீண்டும் முயல்வர் இறுதியில் கும்பத்தினை எடுத்து ஆதி வாசிகள் ஆரவாரித்து ஒரு சுற்றுச் சுற்றி வருவர் இதன்போது உடையார் ஆதிவாசிகளுக்கும் பூசாரிகளுக்கும் இடையில் உரையாடல்களை நடத்திக்கொண்டு திரிவார் பூசாரிகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் கமுக மரத்தினை கைப்பற்றுவதே இறுதி வெற்றியாக அமையும் என உடையாரால் அறிவிக்கப்படும்.

இதன்படி கமுக மரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஆதிவாசிகள் ஈடுபடுவர் கமுக மரத்தினை ஆதிவாசிகள் அண்மித்ததும் பூசாரிகள் அவர்களை மரத்துடன் இணைத்துக் கட்டி விடுவார்கள் ஆதிவாசிகள் பூசாரிகளிடம் கட்டுண்டவர்களாக தாம் இனி உங்களது பெயர் சொல்லும் இடங்களில் தங்க மாட்டோம் எனச் சத்தியம் செய்து விடுதலை பெற்றுச் சென்று விடுவர்.இதைத்தொடர்ந்து சூழ நின்ற பார்வையாளர்களும் தமது வீடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் இவ்வாறு சந்திவெளியில் சுமார் இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற மகிடிக் கூத்து நிறைவுக்கு வந்தது.

இன்றைய காலத்தில் இதன் முக்கியத்துவம்

கூத்து முடிந்ததும் அதில் ஆதிவாசியாக வந்த ஒருவருடன் கதைத்த போது “சித்திரை வருசத்த கொண்டாடுறதுக்கு மகிடி ஆட ஊருக்குள்ள காசு சேத்தம் எட்டாயிரம் வந்திச்சி நாங்களும் போட்டு மகிடி ஆடித்தம் மகிழ்ச்சியாயிருக்கு இனி முசுப்பாத்திதான்”எனக் கூறிக் கொண்டு நடந்தார்.இங்கு மிக இயல்பாக அம்மனிதர் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்றைய கால கட்டத்தில் இம்மகிடிக் கூத்தாடியதன் முக்கியத்துவத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. அதாவது இன்று எமது சூழலில் எல்லாவற்றுக்கும் அனுசரணை வழங்க யாரோ எவரோ தேவையாக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு மனிதக் கூட்டத்தினர் வெளியார் எவரிடமும் எந்த வித உதவியையும் எதிர்பாராமல் சுயமாகத் தமது உழைப்பில் தமக்கான மகிழ்ச்சி தரும் விழாவினை நடத்தி திருப்தி கண்டுள்ளமையாகும்.

இங்கு மகிடிக் கூத்து நிகழ்த்தியவர்கள் யாருக்காகவோ மகிடி ஆடவில்லை மாறாக தமக்காகவும் தமது ஊரவரின் மகிழ்ச்சிக்காகவும் தமது உழைப்பில் மகிடி ஆடித் தாமும் மகிழ்ந்து ஊரவரையும் மகிழ்வித்துள்ளார்கள். இத்தகைய மகிழ்ச்சியே நிலை பேறான மகிழ்ச்சி, இத்தகைய மனித மகிழ்ச்சிக்காகத்தான் இன்றைய உலகில் கலைச் செயற்பாட்டாளர்கள் பலரும் பாடுபட்டு வருகின்றார்கள்.இந்த நிலை பேறான மகிழ்ச்சியை மகிடிக் கூத்து அளிக்கை ஒவ்வொரு வருடமும் சந்திவெளி மக்களுக்குச் சாத்தியமாக்கி வருவது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது எனலாம்.

இக்கூத்தின் போது ஊரின் இயற்கைச் சூழல் நன்கு திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தமை முக்கிய அம்சமாகும் அதாவது ஊரின் சிறு பற்றைக்காடுகளை அண்டிய பகுதியில் இக்கூத்து ஆடப்பட்டிருந்தமை இக்கூத்திற்கான ஆற்றுகையாளர்களை சரியான அர்த்தத்துடன் ஆற்றுகைக்குக் கொண்டு வர சாத்தியமாகியிருந்தது அதாவது காடுகளுக்குள்ளிருந்து ஆதிவாசிகள் (குறவர்கள்,வேடர்கள்) ஊரிற்குள் வரும் கதையின் பொருத்தப்பாடு சிறப்பாக இருந்தது. செலவுகளின்றி ஊரின் இயற்கை வெளிகளிலேயே இலகுவாகவும் எளிமையாகவும் காட்சிச் சித்தரிப்புக்களை அர்த்தங் கொள்ளச் செய்து ஆற்றுகையினை நிகழ்த்தும் நுட்பம் இம்மகிடிக் கூத்தின் சிறப்பம்சமாகும்.