காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த ஐந்து தினங்களில் போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை மீறிய இருநூறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் தலைக்கவசம் அணிந்து செல்லாதவர்கள், மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில்; இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்காத பெண்கள் உட்பட போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை மீறியவர்கள் மீதே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் குறி;ப்பிட்டனர்.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருக்காதவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இதேவேளை களுவாஞ்சிகுடி,மட்டக்களப்பு,வாழைச்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் அதிகளவான போக்குவரத்து விதிகளை மீறிச்சென்றோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் வி.இந்திரனின் ஆலோசனையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்துச்சம்பவங்கள் அதிகரித்துச்செல்வதை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
