முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தரச் சம்பளம்- கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இவ் வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடத்திலிருந்தாவது நிரந்தர மாதாந்தக் சம்பளம் வழங்குவதற்கான விரைந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தினால் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கை நூல் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இப் பாலர் பாடசாலைப் பணியகத்தினை நாங்களும் முன்நோக்கோடு செயற்படுத்தி வருகிறோம். எமது மாகாணத்தில் 59ஆயிரம் எதிர்கால சந்ததிக்கான குழந்தைகளுக்கு கல்வி ஊட்டி வருகிறோம். 1800 பாலர் பாடசாலைகள் இருக்கின்றன.

அந்த வகையில் ஆசிரியர்களு;கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருங்காலத்திற்கான சிறந்த தலைவர்களை உருவாக்கு கின்ற சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளோம்.
எமது இளம் சிறார்கள் நல்ல முறையிலே அவர்களுக்கான நல்ல பழக்கங்களை, சமூகத்தில் சிறந்த முறையில் நடக்கின்றவர்களாக உருவாக்கு கின்ற ஆசிரியர்களுக்குரியது. இப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்தி, கற்று அறிவை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலே பேராசிரியர்களும் கல்வி மான்கள் இப்பிணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

எதிர்கால சந்ததியினை சிறந்த வகையில் உருவாக்குபவர்களாக இருக்கின்ற நீங்கள் உங்களது கல்வித் தரத்தினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தினை ஒரு கல்வித் தரத்தில் சிறப்பான நிலையில் இருக்கின்ற மாகாணமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றோம். அந்தப்பணியை ஏற்றிருக்கின்றோம்.
அந்த வகையில், எதிர்கால சந்ததியினை சிறந்த வகையில் வளத்துடன் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக் மற்றும் எம்.அமீர், பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வதிவிட பணி;ப்பாளர் நெட் ஏஸ்பி, முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்பட அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாலர்பாடாலை பணியகத்தின் பணி;ப்பாளர்கள் அசிரியைகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.