கடந்த 10தினங்களாக இடம்பெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் நேற்று இடம்பெற்ற கும்பஞ்சொரிதல் நிகழ்வுடன் நிறைவுபெற்றது.
நேற்று பிற்பகல் ஆலயத்தில் மஞ்சல் நீராடும் நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.பக்தர்கள் மஞ்சல் தெளித்து தமது பக்தியை இதன்போது வெளிப்படுத்தினர்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரமளித்து அருள்பாலித்துவரும் கல்லடி,உப்போடை பேச்சியம்மன் ஆலயம் இப்பிரதேசத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக உள்ளது.
இந்த ஆலயமானது பெரும் செல்வ நிலையை கொண்டிருக்கும்போதிலும் இன்றும் ஆதிகாலத்தில் அமைக்கப்பட்டது போன்று கொட்டகையிலேயே வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
தேக்கு மரங்கள் சூழ அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்துக்குள் வரும் பக்தர்கள் என்றும் குளிர்மையும் மெய்சிலிர்க்கும் பக்தியையும் உணர்வது சிறப்பம்சமாகும்.
இத்தனை சிறப்புக்கொண்ட இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று மாலை அம்மனுக்கு சக்கரை பொங்கல் பொங்கி படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.ஆலயத்தினை சூழ பெரும் பானைகள் வைக்கப்பட்டு அடியார்களால் சக்கரைப்பொங்கல் இடப்பட்டன.
ஆதனைத்தொடர்ந்து அம்மனுக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு தேவாதிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஏழு சிறுமிகளுக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு உற்சவம் மாலை வரை சிறப்பு பெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு ஆலயத்தில் இருந்து சமுத்திரத்துக்கு கும்பம் கொண்டுசெல்லப்பட்டு கும்பம் சொறியும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.இதனைத்தொடர்ந்து அன்னையின் வருடாந்த திருச்சடங்கு நிறைவுக்கு வந்தது.
இந்த உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.