மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை- பிரதியமைச்சர் முரளிதரன்

மட்டக்களப்பு மாவட்;டத்தி மிகவும் பின்தங்கிய கிராமங்களை முழுமையாக அபிவிருத்திசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய அபிவிருத்திப்பணிகள் நிறைவுக்கட்டத்தை அடையவுள்ள நிலையில் கிராமங்களை முழுமையாக அபிவிருத்திசெய்யும் பணிகள் பொருளாதார அபிவிருத்தியமைச்சின் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்கள் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.

இதன் முதலாவது அலுவலகம் களூவஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன்,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த அலுவலகம் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் வழிநடத்தப்படவுள்ளது.

அத்துடன் கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பிலும் இந்த அலுவலகம் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.