பாசிக்குடாவில் பாரிய காணி மோசடி – விசாரணை நடத்த உத்தரவு

மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு அருகில் உள்ள 167 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்று போலி காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்படடு சிலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

13 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த காணியை 1979 ஆம் ஆண்டு இரண்டு சுவிஸ் பிரஜைகள், தமிழர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தனர்.

போர் நடைபெற்ற காலத்தில் சுவிஸ் உரிமையாளர்கள் காணியை பார்வையிட செல்லாத காரணத்தினால், சிலர் போலி ஆவணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணி பகுதி ஒன்றை தற்போது கொழும்பு மாவட்டத்தின் மாநகர சபை ஒன்றில் அங்கம் வகிக்கும் பிரதி முதல்வர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.

முஸ்லிம் ஒருவரிடம் இருந்து அவர் இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 60 மில்லியன் ரூபாவுக்கு அவர் இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த காணி கொள்ளையின் பின்னணியில் நிறுவனம் ஒன்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி காணி கொள்ளையடிப்பு பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்துடன் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

எனினும் அரசியல் தலையீடுகள் காரணமாக விசாரணைகள் நிறுத்தப்பட்டதுடன், அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த மிகப் பெரிய காணி கொள்ளையடிப்பு சம்பவத்துடன் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, முன்னாள் படை உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காணி கொள்ளை சம்பவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.