மட்டக்களப்பு நகர் வருடா வருடம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்வதும் பொது இடங்களில் இடைத்தங்கல் முகாம்கள் அமைப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில் இதனை ஓரளவேனும் தடுக்கும் நோக்கோடு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இணைந்து நீர் வடிந்தோடும் இடங்களை தூர்ந்தெடுத்து சீர்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இயற்கையாக நீர் வடிந்தோடும் ஓடைகளை பெரும்பாலான மக்கள் தமக்கு சாதகமாக மதில்கள் மூலமும், வீடுகள் மூலமும் தடுப்புச் சுவர்கள் அமைப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையுள்ளதாகவும் மாநகர ஆணையாளர் சிவநாதன், பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
மட்டக்களப்பு நகரின் நாவற்கேணி, கருவப்பங்கேணி, சின்ன ஊறணி, இருதயபுரம், பார் வீதி, ஜெயந்திபுரம், தாமரைக்கேணி, கூழாவடி, மாமாங்கம் போன்ற கிராமங்கள் முழு நீரில் மூழ்குவதற்கு ஒரு சிலர் இயற்கை ஓடைகளை அடைத்து வைத்திருப்பதே காரணமாக அமைகின்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன், மாநகர ஆணையாளர் சிவநாதன், பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோர் இடங்களை நேரடியாகச் சென்றுபார்வையிட்டனர்.



