மட்டக்களப்பில் ஜப்பானிய இசை வல்லுனர்களின் “றண்டுகா” இசை நிகழ்வு

(கிருஸ்ணா)

ஜப்பானிய இசை வல்லுனர்கள் நடத்தும் மாபெரும் றண்டுகா இசை நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் உலக பிரசித்திபெற்ற றண்டுகா இசை நிகழ்வை ஜப்பானிய கலைஞர்கள் வழங்கவுள்ளனர்.

13ஆம் திகதி மாலை 06மணி தொடக்கம் 8.30மணி வரை கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தின் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜப்பான் இசை குழுவின் நிகழ்ச்சி பணிப்பாளர் பேராசிரியர் ஜொசிகோ அஸீவாவின் குழுவினர் மற்றும் இந்த நிகழ்வின் இணைப்பாளர் ஜெயசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புண்பாட்டு மரபுரிமைகள் எல்லைகள் கடந்து வல்லுனர்,சாதாரணமானவர் என்ற பேதங்கள் கடந்து இசையால் பேசி மகிழும் ஒரு விளையாட்டான பேசும் ஓசையாக றண்டுகா உருவெடுத்ததாக இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இசைக்கு எல்லைகள் இல்லை என்பர்,இசைக்கு எல்லைகள் உண்டு.எல்லைகள் கடந்து இசையை முன்னெடுத்துச்செல்லும் கலைச்செயற்பாடுகளும் உண்டு என்பதை காட்டுவதே றண்டுகா இசையாகும்.
விற்பன்னர்களுக்கு மட்டுமே இசை உரியது என்ற கருத்துக்கு அப்பால் அனைத்து மனிதர்களுக்கும் இசை உரியது என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த இசை நிகழ்வு அமையவுள்ளது.

இந்த இசை நிகழ்வில் சாதாரணமானவர்கள் உட்பட பெரிய விற்பன்னர்களும் கலந்துகொள்ளலாம்.இதற்கு இசை அனுபவங்கள் தேவையில்லை.யாரும் வந்து கலந்துகொண்டு தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தலாம்.