ஆலய உடைப்பு விசாரணைகள் மந்தகதியில் இடம்பெற்றுவருவதை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரே இரவில் மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒரு மாதத்தினை கடந்துள்ள நிலையில் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படாததை கண்டித்து மாபெரும் அமைதிப்பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இந்த அமைதிப்பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு ஒரு மாதத்தினை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் ஒருவர் கூட கைதுசெய்யப்படாத நிலையில்,சம்பவம் தொடர்பிலான விசாரணை மந்த கதியிலேயே சென்றுகொண்டிருக்கின்றது.

இந்த விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணியளவில் மாங்காடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அமைதி ஆர்ப்பாட்ட பேரணியில் அனைவரையும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை தெரிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார்.